செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சேலத்தை சேர்ந்த நந்திதா ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றார். 

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இன்று நடந்த முதல் சுற்று போட்டியில் இந்தியா சார்பில் ஆடவர் ஏ, பி, சி மற்றும் மகளிர் ஏ, பி, சி என மொத்தம் 6 அணிகள் கலந்துகொண்டு ஆடின.

ஆடவர் பி அணியில் இடம்பெற்று ஆடிய ரோனக் சத்வானி 36 நகர்த்தலில் ஐக்கிய அரபு அமீரக வீரர் அப்துல் ரஹ்மான் முகமதுவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

ஆடவர் பி அணியில் இடம்பெற்று ஆடிய இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷ், அமீரக வீரர் ஹோசானி ஓம்ரானை வீழ்த்தி வெற்றி பெற்றார். 

ஆடவர் சி பிரிவில் இந்திய வீரர்கள் கார்த்திகேயன் முரளி மற்றும் அபிஜித் குப்தா ஆகிய இருவரும் தெற்கு சூடான் வீரர்களை வீழ்த்தி வெற்றி பெற்றனர். 

ஆடவர் பிரிவில் இந்தியா ஏ அணி ஜிம்பாப்வேவை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்திய மகளிர் பி அணி வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இந்திய மகளிர் சி அணியில் இடம்பெற்று ஆடிய ஈஷா கர்வடே மற்றும் பிரத்யுஷா ஆகிய இருவரும் ஹாங்காங் வீராங்கனைகளை வீழ்த்தி வெற்றி பெற்றனர். சி அணியில் இடம்பெற்றிருந்த சேலத்தை சேர்ந்த நந்திதா ஹாங்காங்கின் டெங் ஜிங் கிறிஸ்டலை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

ஒட்டுமொத்தமாக முதல் நாள் நடந்த முதல் சுற்றில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றனர்.