sachin shared interesting fact about sehwag
இந்திய அணியின் தொடக்க ஜோடிகளில் காலத்தால் அழியாத ஒரு ஜோடி என்றால் சச்சின் - சேவாக். இருவரும் இணைந்து களத்தில் இறங்கினால் எதிரணிகளும் பவுலர்களும் கதிகலங்கிய காலம் உண்டு.
இந்திய அணியின் வெற்றிகரமான தொடக்க இணைகளில் ஒன்றாக சச்சின் - சேவாக் இணை திகழ்ந்தது. சேவாக்கின் அதிரடி, சச்சினின் வியூக ஆட்டம் இவை இரண்டும் எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும். பொதுவாக தொடக்க ஆட்டக்காரர்கள் களத்திற்கு வெளியேயும் நெருங்கி நட்புடன் பழகுவது வழக்கம்.

அதற்கு சச்சினும் சேவாக்கும் விதிவிலக்கல்ல. இவர்கள் இருவருமே களத்திற்கு அப்பாற்பட்டு நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்தார்கள். அவர்களுக்கு இடையேயான புரிதல் களத்திலும் எதிரொலித்தது.

அதிரடி வீரரான சேவாக் குறித்து சச்சின் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். சச்சின் மற்றும் சேவாக் இணைந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதில் இருவரும், ஒருவர் குறித்து மற்றொருவர் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.

அப்போது சேவாக் குறித்து பேசிய சச்சின், சேவாக் அணிக்கு வந்த புதிதில் என்னுடன் சரியாக பேசமாட்டார். நாங்கள் இருவரும் இணைந்து ஆடவுள்ளோம். எனவே இப்படியே இருந்தால் சரிப்பட்டு வராது என்பதால், நானே அவரிடம் சென்று பேசினேன். சாப்பிட போகலாமா என சேவாக்கிடம் கேட்டேன். சாப்பிடப் போவதற்கு முன்னதாக உனக்கு என்ன பிடிக்கும் எனவும் கேட்டேன். அதற்கு, நான் சைவம் என்றார். ஏன் சைவம் சாப்பிடுகிறாய் என கேட்டேன். சிக்கன் சாப்பிட்டால் உடல் பருமனடையும் என வீட்டில் சொல்லியிருக்கிறார்கள். அதனால் சிக்கன் சாப்பிடமாட்டேன் என சேவாக் பதிலளித்தார்.
உடனே நான்(சச்சின்) அவரிடம், நானும் தான் சிக்கன் சாப்பிடுகிறேன்.. நான் என்ன உன்னைவிட குண்டாகவா இருக்கிறேன்? என கேட்டு, சேவாக்கை சிக்கன் சாப்பிட வைத்தேன். அவரும் முதன்முறையாக அன்று சிக்கன் சாப்பிட்டார். அதுமுதல் இன்று வரை சிக்கன் சாப்பிடுகிறார். இப்போது சிக்கனை வெளுத்து வாங்குகிறார் சேவாக் என சச்சின் தெரிவித்தார்.
