- Home
- Sports
- Sports Cricket
- வரலாறு படைத்தது இந்தியா.. 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை தட்டித் தூக்கி சாதனை!
வரலாறு படைத்தது இந்தியா.. 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை தட்டித் தூக்கி சாதனை!
டி20 உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை தோற்கடித்து கோப்பையை வென்றுள்ளது. டி20 உலகக்கோப்பையில் 3வது கோப்பை வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளது.

2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன்
டி20 உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 255 ரன்கள் குவித்தது.
சஞ்சு சாம்சன் வெறும் 46 பந்துகளில் 8 சிக்சர்கள், 5 பவுண்டரியுடன் 89 ரன்கள் விளாசி அசத்தினார். அபிஷேக் சர்மா 21 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 52 ரன்கள் அடித்தார். இஷான் கிஷன் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்தார். ஷிவம் துபே வெறும் 8 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 26 ரன்கள் எடுத்தார்.
அக்சர் படேல் கலக்கல் பவுலிங்
பின்பு இமாலய இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி ரன்களுக்கு 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 96 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் டிம் ஷெப்பர்ட் 26 பந்துகளில் 5 சிக்சர், 2 பவுண்டரியுடன் 52 ரன்கள் எடுத்தார். அரையிறுதியில் சதம் விளாசிய பின் ஆலன் (9) சொதப்பினார். கேப்டன் மிட்ச்சல் சாண்ட்னர் (43) தவிர மற்ற வீரர்களும் ஏமாற்றினார்கள். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். அக்சர் படேல் சிறப்பாக பந்துவீசி 3 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார்.
3வது கோப்பையை கைப்பற்றிய முதல் அணி
இதன் மூலம் இந்திய அணி 3வது முறையாக டி20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. 3வது கோப்பையை வென்ற முதல் அணி இந்தியா தான். மேலும் உலகக்கோப்பை போட்டிகளை நடத்திய நாடுகள் இதுவரை கோப்பையை வென்றதில்லை. இந்த மோசமான சாதனையையும் முறியடித்து உலகக்கோப்பையை நடத்தி கோப்பையை வென்று சாதித்துள்ளது.
இந்திய அணிக்கு வாழ்த்து மழை
மேலும் தொடர்ந்து இரண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற முதல் நாடு என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளது. டி20 உலகக்கோப்பையை கையில் ஏந்திய இந்திய அணிக்கு நாடு முழுவதிலும் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பல முறை அரையிறுதி, இந்த முறை பைனல் வந்தும் கோப்பையை வெல்ல முடியாத நியூசிலாந்து அணியின் சோக கதை தொடர்கிறது.

