சர்வதேச கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பின் (ஃபிஃபா) "2016-ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர்' விருதை போர்ச்சுகல் நாட்டு கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார்.

"2016-ஆம் ஆண்டானது, எனது கால்பந்து வாழ்க்கையின் மிகச் சிறந்த ஆண்டு' என்று விருதை வென்ற ரொனால்டோ தெரிவித்தார்.

இந்த விருதுக்காக, ரொனால்டோவுக்கு ஆதரவாக 34.5 சதவீதம் பேரும், ஆர்ஜென்டீனா வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு ஆதரவாக 26.4 பேரும் வாக்களித்துள்ளனர்.

தேசிய கால்பந்து அணிகளின் பயிற்சியாளர்கள், கேப்டன்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் இரசிகர்களைக் கொண்டு இந்த விருதுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதனிடையே, லெய்செஸ்டர் சிட்டி கிளப் கால்பந்து அணியின் பயிற்சியாளரான கிளாடியோ ரானிரிக்கு "சிறந்த பயிற்சியாளர்' விருது வழங்கப்பட்டது.

அமெரிக்க கால்பந்து வீராங்கனை கார்லி லாய்ட் "சிறந்த கால்பந்து வீராங்கனை' விருது வென்றார்.

கொலம்பிய கிளப் அணியான அட்லெடிகோ நேஷ்னல் அணிக்கு "ஃபேர் பிளே' விருது வழங்கப்பட்டது.

இந்த அணி, கோபா சுடமேரிக்கானா கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்றில் தங்களுடன் மோதுவதாக இருந்து விமான விபத்தில் உயிரிழந்த பிரேசில் கிளப் அணிக்கு, அந்தக் கோப்பையை விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.