Ronaldo - Messi competed for ten years. Ronaldo wins the title of this year ...
ஐந்தாவது முறையாக "பேலன் தோர் கால்பந்து" விருதை போர்ச்சுக்கீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அர்ஜென்டீனா வீரர் லயோனல் மெஸ்ஸியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் "பிரான்ஸ் ஃபுட்பால்' பத்திரிகை சார்பில் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்படும் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுகிறார்.
அந்த வகையில் இந்தாண்டில் "பேலன் தோர்" விருதுக்கு ரொனால்டோ தேர்வாகியுள்ளார். அதற்கான போட்டியில் மெஸ்ஸி 2-வது இடத்தையும், பிரேஸிலின் நெய்மர் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
விருது வென்ற ரொனால்டோ இதுகுறித்து கூறியது: "இந்தத் தருணத்தில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதை வெல்வதற்கு மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருப்பேன்.
கடந்த ஆண்டில் வென்ற கோப்பைகள், இந்த விருதுக்கு வழிவகுத்துள்ளன. ரியல் மாட்ரிட் அணியின் சக வீரர்களுக்கு எனது நன்றிகள். மேலும், இந்த விருதை அடைய உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றிகள்.
இப்போது சிறப்பாக ஆடுவதைப் போல மேலும் சில ஆண்டுகளுக்கு விளையாடுவேன் என நம்புகிறேன். இதுபோன்ற விருதுகளில் எனக்கும் மெஸ்ஸிக்கும் இடையேயான போட்டி தொடரும் எனவும் நம்புகிறேன். அனைத்தும் காரணத்துடனேயே நிகழ்கிறது என்று ரொனால்டோ கூறினார்.
ரொனால்டோ இதற்கு முன்பாக, 2008, 2013, 2014, 2016-ஆம் ஆண்டுகளில் இந்த விருதை வென்றுள்ளார் என்பதும் கடந்த பத்து வருடங்களாக பேலன் தோர் விருதுக்கு ரொனால்டோவும், மெஸ்ஸியும் போட்டிபோட்டு வென்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
