ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய ரோஹித் சர்மா நாடு திரும்பியுள்ளார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த ரோஹித் சர்மா, சரியாக ஆடாததால் தொடரில் பாதியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து சுற்றுப்பயணம், வெஸ்ட் இண்டீஸ் தொடர் ஆகியவற்றில் ரோஹித் சர்மா புறக்கணிக்கப்பட்டார். 

ஆனால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார் ரோஹித் சர்மா. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா பெரிதாக சோபிக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் 37 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 1 ரன் மட்டுமே எடுத்தார். அந்த போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அந்த போட்டியில் காயமடைந்ததால் பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். காயம் குணமடைந்ததால், மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 63 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் ரோஹித் சர்மா. ரோஹித்தின் இந்த இன்னிங்ஸ் மிக முக்கியமானது. இந்த போட்டியிலும் இந்திய அணி வென்று தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா ஆடவில்லை. கர்ப்பமாக இருந்த ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ரோஹித் சர்மா கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகி மும்பைக்கு திரும்பியுள்ளார்.