ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. விராட் கோலிக்கு பல வகைகளில் சவாலாக திகழ்கிறார் ரோஹித் சர்மா. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 14வது ஆசிய கோப்பை தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்த தொடரில் மொத்தமாக 6 போட்டியில் ஆடிய இந்திய அணி, ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி மட்டும் டிரா ஆனது. 

மிடில் ஆர்டரில் பல மாதங்களாகவே சொதப்பிவரும் இந்திய அணி, ஆசிய கோப்பை தொடரிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் தவானும் அபாரமாக ஆடினர். தவான் இரண்டு சதங்களும் ரோஹித் சர்மா ஒரு சதமும் விளாசினர். 

ஆசிய கோப்பை தொடருக்கு பிறகு ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பேட்டிங் தரவரிசையில் முதல் 5 இடங்களில் 3 இந்திய வீரர்கள் உள்ளனர். ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் 884 புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். 842 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா இரண்டாமிடத்திலும் 802 புள்ளிகளுடன் ஷிகர் தவான் ஐந்தாமிடத்திலும் உள்ளனர்.

முதலிடத்தில் உள்ள விராட் கோலிக்கும்  ரோஹித் சர்மாவுக்கும் இடையே 42 புள்ளிகள் தான் வித்தியாசம். எனவே முதலிடத்தை பிடிக்க ரோஹித் போராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைக்காலமாக ரோஹித்துக்கும் விராட்டுக்கும் இடையே பனிப்போர் நடந்துவருகிறது. 

விராட் கோலியை மட்டுமே நம்பி இந்திய அணி இருப்பதாக ஒரு பார்வை இருந்தது. விராட் கோலி இல்லாமலேயே ஆசிய கோப்பையை வென்று, கோலியை மட்டுமே சார்ந்து இந்திய அணி இல்லை என நிரூபித்த ரோஹித், நிரந்தரமாக இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க தயார் என அதிரடியாக தெரிவித்தார். 

விராட் கோலியின் கேப்டன்சியின் மீது விமர்சனங்கள் இருந்துவந்த நிலையில், ரோஹித் சர்மா ஆசிய கோப்பை தொடரில் தனது கேப்டன்சி திறமையை நிரூபித்து முன்னாள் ஜாம்பவான்களின் பாராட்டையும் பெற்றார். இவ்வாறு விராட் கோலிக்கு சவாலாக திகழ்ந்துவரும் ரோஹித், பேட்டிங் தரவரிசையிலும் விராட் கோலியை நெருங்கிவிட்டார். கோலியை முந்த முயல்வார் என்பதில் ஐயமில்லை.