அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே தனது மகன் அபாரமாக ஆடிவருவது குறித்து அவரது தாய் நெகிழ்ந்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்தது. அதனால் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. முரளி விஜய்க்கு பதிலாக தவானும், தினேஷ் கார்த்திற்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட்டும், குல்தீப் யாதவிற்கு பதிலாக பும்ராவும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் மற்றவர்களை காட்டிலும் இளம் வீரர் ரிஷப் பண்ட்டின் மீது அனைவரின் கவனமும் இருந்தது. அவர் மீது முன்னாள் ஜாம்பவான்களும் நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த நம்பிக்கையை வீணடிக்காமல் சிறப்பாகவே ஆடினார் ரிஷப். அறிமுக போட்டியில் களமிறங்கிய ரிஷப் பண்ட், இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் அடித்து ரன் கணக்கை தொடங்கினார். 24 ரன்கள் அடித்தார் ரிஷப்.

அதேபோல் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு, 5 கேட்ச்களை பிடித்தார். ரிஷப் பண்ட் இந்திய அணியில் ஆடியது குறித்து பேசியுள்ள அவரது தாய், ரிஷப்பிற்கு இந்திய அணியில் ஆடுவது குறித்து அறிந்தவுடன் எனக்கு பதற்றமாகவும் வியப்பாகவும் இருந்தது. போட்டியில் ஆடுவதற்கு முன்னதாக எனக்கு போன் செய்து டிவியில் போட்டியை பார்க்குமாறு ரிஷப் கூறினான். பொதுவாக நான் டிவியில் போட்டிகளை பார்ப்பதில்லை. ஆனால் ரிஷப்பின் தந்தை இறந்துவிட்டதால், என்னை டிவியில் போட்டியை பார்க்குமாறு ரிஷப் கூறினான் என அவரது தாய் கூறியுள்ளார்.