எம்.எஸ். தோனியின் தீவிர ரசிகர் ஒருவர், தனது திருமணத்தின் போது, சிஎஸ்கே போட்டிகளை தடையின்றி பார்க்க அனுமதிக்குமாறு தனது மனைவிக்கு ஒரு வேடிக்கையான ஒப்பந்தத்தை வழங்கினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் எம்.எஸ். தோனியின் தீவிர ரசிகர் ஒருவர், திருமணத்தின் போது தனது மனைவிக்கு ஒரு வேடிக்கையான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார்.

தனக்குப் பிடித்த கிரிக்கெட் அணியின் போட்டிகளைத் தடையின்றிப் பார்ப்பதற்கான விதிமுறைகளை இந்த ஒப்பந்தத்தில் கூறியுள்ளார். இந்த கலகலப்பான தருணம் சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போலப் பரவி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமண ஒப்பந்தத்தில் எழுதப்பட்டிருந்தது என்ன?

இன்ஸ்டாகிராமில் 65,000க்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட துருவ் மஜேத்தியா என்ற மணமகன், தனது மணமகள் ஆஷிமா கக்கர்-க்கு திருமண மேடையில் ஒரு சட்டபூர்வமற்ற ஒப்பந்தத்தை வழங்கினார். அதைப் பார்த்து வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அதை மணமகள் ஆஷிமா சத்தமாக வாசித்தார்.

"நான், கீழே கையொப்பமிட்டுள்ள மணமகன் துருவ் மஜேத்தியா, ஆஷிமா, எதிர்காலத்தில் எம்.எஸ். தோனி, சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளின் அனைத்துப் போட்டிகளையும் நான் தடையின்றிப் பார்க்க அனுமதித்தால், நான் மனபூர்வமாகவும், மகிழ்ச்சியுடனும், மேற்கொண்டு பேச்சுவார்த்தை இல்லாமல், அவளை மணந்துகொள்கிறேன் என்று இதன் மூலம் அறிவிக்கிறேன்." என அதில் கூறப்பட்டிருந்தது.

மஜேத்தியா இந்தத் தருணத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்தப் பதிவு 30,000க்கும் அதிகமான லைக்குகளைக் குவித்து விரைவாகப் பிரபலமடைந்தது.

தோனியுடன் சந்திப்பு

மஜேத்தியா எம்.எஸ். தோனியின் தீவிர ரசிகர் என்பதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் தெளிவாகக் காட்டுகிறது. அவரது பயனர் பெயரின் முடிவில், தோனியின் பிரபலமான ஜெர்சி எண்ணான '7' உள்ளது.

தோனியுடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதில், தோனியைச் சந்தித்தபோது தான் அவரது கால்களைத் தொட்டு வணங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.