வெங்காயம் பூண்டால் தகராறு! விவாகரத்தில் முடிந்த திருமண வாழ்க்கை! நடந்தது என்ன?
மனைவி உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காததால் ஏற்பட்ட தகராறு விவாகரத்தில் முடிந்துள்ளது. குடும்ப நல நீதிமன்றத்தில் தொடங்கிய இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்து கணவன் பராமரிப்பு தொகை வழங்க ஒப்புக்கொண்டதை அடுத்து விவாகரத்து.

கணவன் மற்றும் மனைவியின் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையில் யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை, இந்த வார்த்தையை பல சமயங்களில் கேட்டிருப்பீர்கள். இங்கு ஒரு குடும்பத்தில் வெங்காயம் மற்றும் பூண்டால் பெரும் குழப்பமே ஏற்பட்டு விவகாரத்தில் போய் முடிந்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த கேசவ் என்பவருக்கு கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு கேசவ் மனைவி உணவில் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்க்காமல் சமையல் செய்ய ஆரம்பித்தார். இது கேசவ் குடும்பத்தில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை. வெங்காயம், பூண்டு இல்லாமல் சமையல் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பின்னர் ஒரே வீட்டில் இரண்டு வகையான சமையல் செய்யப்பட்டது. அப்படி இருந்த போதிலும் பிரச்சனை ஒய்ந்தபாடியில்லை.
இதையடுத்து கேசவ் மனைவி தனது குழந்தையை அழைத்துக்கொண்டு, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு கேசவ் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி அகமதாபாத் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் சமையலில் வெங்காயம், பூண்டு போடாமல் உணவு தயாரிப்பதாகவும், வீட்டில் இருந்து சென்று விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. அதோடு மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்கவும் உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து இருவரும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். விரும்பி வீட்டை விட்டுச் சென்ற மனைவிக்கு பராமரிப்பு கொடுக்க உத்தரவிட்டதை எதிர்த்து கேசவ் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனைவி தரப்பில் விவாகரத்தை எதிர்த்தும், பராமரிப்பு தொகையைக் கொடுக்க உத்தரவிடவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கேசவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் மனைவிக்குப் பூண்டு, வெங்காயம் இல்லாமல் சமையல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உணவு பழக்கம்தான் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட காரணம் என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து கேசவ் மனைவி சார்பாக ஆஜரான வழக்கறிஞர், விவாகரத்துக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பராமரிப்பு தொகையை கொடுக்க உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை கேசவ் ஏற்றுக்கொண்டார். பராமரிப்பு தொகையை செலுத்திவிடுவதாகத் தெரிவித்தார். இதையடுத்து இருவருக்கும் விவாகரத்து வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வெங்காயம், பூண்டால் திருமண தம்பதி பிரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

