rishabh pant and vijay shankar superb batting against csk

212 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் முதல் 4 விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழ, ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி மிரட்டினார். கடைசி நேரத்தில் பிராவோ ஓவரில் விஜய் சங்கர் விளாசிய சிக்ஸர்கள், சென்னை அணியை சற்று பதறவைத்தார்.

புனே மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். 

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வாட்சன் மற்றும் டுபிளெசிஸ் ஆகிய இருவரும் முதல் 4 ஓவர்களுக்கு நிதானமாக ஆடினர். 4 ஓவர் முடிவில், சென்னை அணி வெறும் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பிளன்கெட் வீசிய ஐந்தாவது ஓவரில் அதிரடியாக ஆடிய வாட்சன், மூன்று சிக்ஸர்கள் விளாசி அணியின் ரன் வேகத்தை உயர்த்தினார்.

ஒருபுறம் வாட்சன் அதிரடியாக ஆட, மறுபுறம் டுபிளெசிஸ் திணறினார். 33 பந்துகளுக்கு 33 ரன்களில் டுபிளெசிஸ் வெளியேறினர். ரெய்னாவும் ஒரு ரன்னில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய வாட்சன், 78 ரன்களில் அவுட்டானார்.

வாட்சன் வெளியேறியதும் அவர் விட்டுச்சென்ற பணியை தோனி தொடர்ந்தார். டிரெண்ட் போல்ட் வீசிய 17வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் விளாசினார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் தோனி அரைசதம் கடந்தார். வாட்சன் மற்றும் தோனியின் அதிரடியால் சென்னை அணி 211 ரன்கள் குவித்தது.

212 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, 9 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். அதன்பிறகு அதிரடியாக ஆட தொடங்கிய நேரத்திலேயே கோலின் முன்ரோவும் வீழ்ந்தார். ரிஷப் பண்ட்டும் ஷ்ரேயாஸ் ஐயரும் ஜோடி சேர்ந்தனர்.

ஷ்ரேயாஸ் ஐயரும் 13 ரன்களில் ரன் அவுட்டானார். மேக்ஸ்வெல்லும் அவுட்டாக, மிகப்பெரிய இலக்கை துரத்தும் டெல்லி அணியின் முதல் 4 விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. அதன்பிறகு ரிஷப் பண்ட்டுடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார்.

விஜய் சங்கர் முதலில் திணறியதால் நிதானமாக ஆடினார். ஆனால் மறுபுறம் ரிஷப் பண்ட், அதிரடியாக ஆடி, சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக அடித்து தோனியை மிரட்டினார். தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த நிலையிலும், தேவைப்படும் ரன்ரேட் அதிகமாக இருந்ததால், நடு ஓவர்களில் கூட ரிஷப் பண்ட் அதிரடியை கைவிடவில்லை. ஜடேஜா, வாட்சன், பிராவோ, ஹர்பஜன், ஆசிஃப் என அனைவரின் ஓவரையுமே அடித்து ஆடினார்.

ரிஷப் பண்ட்டின் அதிரடியை கட்டுப்படுத்த முடியவில்லை. வெற்றி சென்னை அணிக்கே என்ற நிலை உருவாகாமல் பார்த்துக்கொண்டார். அதிகமான ரன்ரேட் தேவைப்பட்ட நேரத்திலும் கூட, டெல்லி அணிக்கு வாய்ப்பிருக்கிறது என ரிஷப் பண்ட் நம்ப வைத்தார்.

அதிரடியாக ஆடிய பண்ட், 79 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து சென்னை அணி வீரர்கள் வெற்றி பெற்றுவிடலாம் என எண்ண தொடங்கியிருப்பர். அவர்களின் நினைப்பை சிதைக்கும் வகையில், பண்ட் விட்டு சென்ற பொறுப்பை விஜய் சங்கர் கையிலெடுத்தார். 

19வது ஓவரில் விஜய் சங்கர் மூன்று சிக்ஸர்கள் விளாசினார். கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், விஜய் சங்கர் மற்றும் டேவாட்டியாவால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. 

சென்னை அணி வெற்றி பெற்றிருந்தாலும், அந்த அணியின் வெற்றி, கடைசி ஓவரின் நான்காவது பந்திற்கு பிறகுதான் உறுதி செய்யப்பட்டது. அந்தளவிற்கு ரிஷப் பண்ட்டும், விஜய் சங்கரும் அதிரடியான ஆட்டத்தால் சென்னை அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.