ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

11 ஐபிஎல் சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் அணி வலுவான அணியாக திகழ்ந்தும் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் தொடரை வென்றதில்லை. 2009, 2011 மற்றும் 2016 ஆகிய மூன்று முறையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் மூன்று முறையும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. 

உலகின் தலைசிறந்த வீரர்களான விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் ஒருசேர பெங்களூரு அணியில் இருந்தும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. 2018 ஐபிஎல்(11வது சீசன்) தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய பெங்களூரு அணி, பிளே ஆஃப் சுற்றுக்கே தகுதி பெறவில்லை. 14 லீக் போட்டிகளில் 6ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தை பிடித்து வெளியேறியது. 

இதுவரை அந்த அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததால், அந்த அணி நிர்வாகம், பயிற்சியாளர் குழுக்களில் மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்சிபி அணியின் பவுலிங் ஆலோசகராக உள்ள ஆஷிஸ் நெஹ்ராவை தவிர மற்ற அனைவரையும் மாற்ற அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  

தலைமை பயிற்சியாளர் வெட்டோரியை நீக்கிவிட்டு அந்த பொறுப்பிற்கு புதிய நபரை நியமிக்க முடிவு செய்துள்ளது. கேரி கிறிஸ்டன் அல்லது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் சஞ்சய் பங்கார் ஆகிய இருவரில் ஒருவர், ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

அதேபோல ஆர்சிபி அணியின் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளரான டிரெண்ட் உட்ஹில் மற்றும் பவுலிங் பயிற்சியாளரான ஆண்ட்ரூ மெக்டொனால்ட் ஆகியோரும் மாற்றப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.