கடந்த ஓராண்டாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்துவந்த சுரேஷ் ரெய்னா, கடந்த ஆண்டின் இறுதியில் யோ-யோ டெஸ்டில் தேர்ந்தார். அதையடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் இடம்பெறாத ரெய்னாவுக்கு டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தினார் என்றே கூறவேண்டும். அதுவும் நேற்றைய கடைசி போட்டியில் அதிரடியாக 43 ரன்கள் விளாசியதுடன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

அதிரடியாகவும் ஆக்ரோஷமாகவும் பேட்டிங் ஆடுவதுதான் ரெய்னாவின் இயல்பு. தென்னாப்பிரிக்க டி20யில் தனது திறமையை மீண்டுமொரு முறை நிரூபித்த ரெய்னா,ஒருநாள் அணியிலும் இடம்பெற தீவிர முயற்சிகளையும் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ரெய்னா குறித்து கருத்து தெரிவித்துள்ள பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரெய்னா ஆக்ரோஷமான வீரர். பயமின்றி விளையாடக்கூடியவர். அவரிடம் எனக்கு பிடித்ததே அதுதான். நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பிடித்த வீரருக்கு தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் அழுத்தமும் இருக்கும். அதை எதையுமே பொருட்படுத்தாமல், தனக்கே உரிய பாணியில் விளையாடினார் ரெய்னா என ரவி சாஸ்திரி புகழ்ந்துள்ளார்.

இதையடுத்து இலங்கையில் நடைபெற உள்ள முத்தரப்பு தொடர், ஐபிஎல் ஆகிய தொடர்களில் விளையாட உள்ளார். இவற்றை பயன்படுத்தி அணியில் மீண்டும் தனக்கான நிரந்தர இடத்தை பிடிக்க ரெய்னா முயற்சிப்பார் என்பதால், அவரிடமிருந்து அதிரடி ஆட்டத்தை எதிர்பார்க்கலாம். எனவே ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.