உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வது தேர்வுக்குழுவிற்கு ஆரோக்கியமான தலைவலியாக உள்ளது. 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறுவதற்கு சில வீரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகிய இருவரும் தொடக்க வீரர்கள் என்பது உறுதியான ஒன்று. மாற்று தொடக்க வீரரான கேஎல் ராகுல் மோசமான ஃபார்மில் இருப்பதால் அவர் அணியில் இடம்பெறுவது சந்தேகம். 

ரோஹித், தவான், விராட் கோலி, அம்பாதி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஷமி, பும்ரா, குல்தீப், சாஹல் ஆகிய 12 வீரர்கள் உலக கோப்பை அணியில் கண்டிப்பாக இருப்பர். மொத்தம் 15 வீரர்கள் கொண்ட அணியை ஏப்ரல் 23ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்திய அணியில் 12 வீரர்கள் இடம்பெறுவது உறுதி. மீதமுள்ள 3 இடங்களுக்கு கடும்போட்டி நிலவுகிறது. அந்த மூன்று இடங்களில் ரிஷப் பண்ட் கண்டிப்பாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல தினேஷ் கார்த்திக்கும் இருப்பார். 

எஞ்சிய ஒரு இடத்தை பிடிக்கப்போவது யார் என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பு. ராகுல் அணியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் அந்த ஒருவர் மாற்று தொடக்க வீரராக இருக்க வாய்ப்புள்ளது. 

நியூசிலாந்து தொடருக்கு பின்னர் உலக கோப்பை அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், விஜய் சங்கர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரையும் உலக கோப்பை அணியில் எடுப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். இந்தியா ஏ அணியில் ரஹானே சிறப்பாக ஆடி நல்ல ஃபார்மில் உள்ளார். எனவே அவரை அணியில் எடுப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம் என்று பிரசாத் தெரிவித்தார். 

வெளிநாடுகளில் நல்ல ரெக்கார்டை வைத்துள்ள ரஹானே, கடைசியாக 2018ம் ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆடியதுதான் கடைசி. அதன்பிறகு ஒருநாள் போட்டிகளில் ரஹானே ஆடவில்லை. இங்கிலாந்து தொடர், ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆகியவற்றில் புறக்கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.