தமிழ்நாட்டு மாயாஜால சுழல் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை ரூ.8.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது பஞ்சாப் அணி. இந்த சீசனுக்கான ஏலத்தில் இதுவரை கொடுக்கப்பட்டுள்ள அதிகமான தொகை இதுதான். ஜெய்தேவ் உனாத்கத்தையும் இதே தொகை கொடுத்துத்தான் ராஜஸ்தான் அணி எடுத்தது. 

ஐபிஎல் 12வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஏலம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. மெக்கல்லம், யுவராஜ் சிங், மார்டின் கப்டில், கிறிஸ் வோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் போன்ற வீரர்கள் விலை போகவில்லை. 

அதேநேரத்தில், ஹெட்மயர், பிராத்வெயிட், நிகோலஸ் பூரான் ஆகிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிகமான தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அதிகபட்சமாக ஜெய்தேவ் உனாத்கத்தை 8.4 கோடி ரூபாய்க்கு எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 

ஷமியை 4.8 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியும் மோஹித் சர்மாவை 5 கோடி ரூபாய்க்கு சென்னை அணியும் எடுத்தன. 

இதையடுத்து தமிழ்நாட்டு வீரரான மாயாஜால சுழல் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 20 லட்சம் ரூபாய் என்ற அடிப்படை விலையுடன் ஏலத்தில் விடப்பட்டார். இவரை எடுப்பதற்கு பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டின. வருண் சக்கரவர்த்தியை எடுக்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் 8.4 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி அவரை எடுத்தது. 

தமிழ்நாட்டை சேர்ந்த 27 வயதான வருண் சக்கரவர்த்தி, தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் மதுரை பார்ந்தர்ஸ் அணியில் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். 10 டி20 போட்டிகளில் ஆடி 4.7 எகானமி ரேட்டை பெற்றிருந்தார். மேலும் மாயாஜால சுழற்பந்தின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டியதோடு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் மூலம் கவனத்தை ஈர்த்த வருண் சக்கரவர்த்தி, விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாட்டு அணிக்காக ஆடினார். இவர்தான் அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர். மேலும் ரஞ்சி டிராபியிலும் தமிழ்நாட்டு அணிக்காக ஆடிவருகிறார். 

இந்நிலையில், இவரை அதிகபட்ச தொகை கொடுத்து பஞ்சாப் அணி எடுத்துள்ளது. பஞ்சாப் அணியில் ஏற்கனவே அஷ்வின், முஜீபுர் ரஹ்மான் ஆகிய தரமான ஸ்பின்னர்கள் இருக்கும் நிலையில், மற்றொரு மாயாஜால ஸ்பின்னரை பஞ்சாப் அணி எடுத்துள்ளது. இவர் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர். எனினும் ஸ்பின் பவுலிங் அருமையாக வீசி, அதன்மூலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.