இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் புஜாரா ரன் அவுட்டானது ஒட்டுமொத்த அணியையும் பாதித்துவிட்டதாக அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. முதல் டெஸ்ட் போட்டியில் தோற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இருந்தது. நேற்று முன் தினம் தொடங்க வேண்டிய போட்டி மழை காரணமாக நேற்று தொடங்கியது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய விரும்பியதால், இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் தவான் நீக்கப்பட்டு புஜாரா சேர்க்கப்பட்டிருந்தார்.  இங்கிலாந்தின் பவுலிங்கை சமாளிக்க முடியாத இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, 107 ரன்களுக்கே ஆல் அவுட்டாகினர். மழையும் அவ்வப்போது குறுக்கிட்டு வீரர்களின் கவனத்தை சிதறடித்தது. 

தொடக்க வீரர்களாக முரளி விஜயும் ராகுலும் களமிறங்கினர். ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரின் 5வது பந்திலேயே முரளி விஜய் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். இதையடுத்து ராகுலும் ஆண்டர்சன் பவுலிங்கில் வெளியேறினர். புஜாராவுடன் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் ஆடிக்கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டதால் 6.3வது ஓவரில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 

பின்னர் மழை நின்றதும் மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது. இரண்டு ஓவர் வீசப்பட்ட நிலையில், 8.3வது ஓவரில் மீண்டும் ஆட்டம் மழையால் தடைபட்டது. ஆனால் அதற்குள் புஜாரா ரன் அவுட்டாகி தேவையில்லாமல் விக்கெட்டை இழந்தார். மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்ட அந்த பந்தில் தான் புஜாரா அவுட்டானார். ஆண்டர்சன் வீசிய பந்தை புஜாரா அடிக்க, ரன்னுக்கு அழைத்தார் கோலி. புஜாரா பாதி தூரம் ஓடிவந்த பிறகு கோலி வேண்டாம் என்று கூற புஜாரா ரன் அவுட்டானார். சூழலை புரிந்துகொண்டு நிதானமாக ஆடிய புஜாரா தேவையில்லாமல் அவுட்டானது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

 

இது புஜாராவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அணியையும் அதிருப்தியடைய செய்தது. தேவையில்லாமல் அந்த விக்கெட் இழப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே, புஜாராவின் விக்கெட் அவரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த அணியையும் பாதித்துவிட்டது. புஜாராவின் விக்கெட்டும் வானிலையும் எங்களை காயப்படுத்திவிட்டது. மொத்தமாக 4 மணி நேரம் கூட நாங்கள் பேட்டிங் ஆடவில்லை என ரஹானே வருத்தம் தெரிவித்துள்ளார்.