இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் புஜாரா இரட்டை சதத்தை தவறவிட்டார். ரிஷப் பண்ட்டும் சிறப்பாக ஆடிவருகிறார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இமாலய ஸ்கோரை குவித்துள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. முதல் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்களை குவித்திருந்தது. புஜாரா 18வது சதத்தை பூர்த்தி செய்து களத்தில் இருந்தார். புஜாராவுடன் ஹனுமா விஹாரி 39 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இன்றைய ஆட்டத்தில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து 42 ரன்களில் நாதன் லயன் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு புஜாராவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப்புடனும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய புஜாரா, இரட்டை சதத்தை நெருங்கினார். இரட்டை சதம் அடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உணவு இடைவேளைக்கு பிறகு 193 ரன்களில் லயனின் சுழலில் சிக்கி, இரட்டை சதத்தை தவறவிட்டார் புஜாரா. 

புஜாரா அவுட்டானாலும் அவர் விட்டுச்சென்ற பணியை செவ்வனே தொடர்ந்தார் ரிஷப் பண்ட். அரைசதம் கடந்த ரிஷப் பண்ட், சதத்தை நோக்கி ஆடிவருகிறார். ரிஷப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஜடேஜாவும் சிறப்பாக ஆடிவருகிறார். இந்த ஜோடி விரைவாக ரன்களை குவித்து வருகிறது. இரண்டாம் நாள் டீ பிரேக் வரை இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 491 ரன்களை குவித்துள்ளது. ரிஷப் பண்ட் 88 ரன்களுடனும் ஜடேஜா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இரண்டு முறை சதத்தை தவறவிட்ட ரிஷப் பண்ட்டிற்கு இந்த முறை சதமடிக்கும் வாய்ப்பு அருமையாக உள்ளது. 

இந்திய அணி இமாலய ஸ்கோரை எட்டியுள்ளது. இன்னும் சில ஓவர்களை இந்திய அணி ஆடும் என்பதால் 500 ரன்களை கடந்து ஒரு மாபெரும் ஸ்கோருடன் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்யும். இது ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.