ponting blames rishabh pant for maxwell poor form

இந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணி வீரர் மேக்ஸ்வெல் சரியாக ஆடாததற்கு அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் விளக்கமளித்துள்ளார்.

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத டெல்லி அணி, இந்த முறை கோப்பை கனவுடன் களம் கண்டது. ஆனால் இந்த முறையும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பிளே ஆஃபிற்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

இந்த சீசனில் டெல்லி அணியின் இளம் வீரர்கள் பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், லாமிச்சானே ஆகிய இளம் வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல், இந்த சீசன் முழுவதும் ஏமாற்றினார். ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல், மிரட்டல் பேட்டிங் ஆடக்கூடியவர். கடந்த 2014ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர் நாயகன் விருதை பெற்றார் மேக்ஸ்வெல். அப்படியிருக்கையில், இந்த சீசனில் டெல்லி அணியில் ஆடிய மேக்ஸ்வெல், ஒரு போட்டியில் கூட சொல்லும்படியாக ஆடவில்லை. 

12 போட்டிகளில் ஆடி, ஒரு அரைசதம் கூட அடிக்காமல், மொத்தமாகவே 169 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், நடப்பு ஐபிஎல் சீசன் ரிஷப் பண்ட்டுக்கு மிக அருமையான ஒரு தனித்துவ தொடராக அமைந்தது. டாப் ஆர்டரிமிருந்து மேலும் கூடுதல் பங்களிப்பை எதிர்பார்த்தோம், ஆனால் டாப் ஆர்டர் சீரான முறையில் ஆடவில்லை.

கிளென் மேக்ஸ்வெல் சரியாக ஆடாமல் போனதற்கு ஒரு விதத்தில் ரிஷப் பண்ட்டும் காரணம். ரிஷப் பண்ட் 4வது வரிசையில் களமிறங்கி சிறப்பாக பேட்டிங் செய்தார். ஏலத்தில் மேக்ஸ்வெல் பெயரைக் குறிக்கும் போது 4ம் நிலை வீரர் என்றே குறித்தேன். ஆனால் ஆரோன் பிஞ்ச் திருமணத்துக்காக மேக்ஸ்வெல் சென்றதால் முதல் போட்டியில் ஆட முடியாமல் போனது. 

எனவே அந்த வரிசையில் களமிறங்கிய ரிஷப் பண்ட் பேட்டிங்கில் மிரட்டிவிட்டார். அதனால் இவரையும் மாற்ற முடியவில்லை. 5ம் நிலை கிளென் மேக்ஸ்வெலுக்கு அவ்வளவாக பழக்கமில்லாத டவுன் ஆர்டர், எப்போதாவதுதான் இறங்குவார். அவர் சரியாக ஆடாதபோதும் , ஏன் தொடர்ந்து வைத்திருந்தோம் என்றால், ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம் என்ற நிலையில் அணியை வெற்றிபெறச் செய்யும் வீரராகவே கிளென் மேக்ஸ்வெலைப் பார்த்தோம். அவரை மேட்ச் வின்னராக பார்த்தோம் என பாண்டிங் தெரிவித்துள்ளார்.