தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கீழ்த்தரமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து பாகிஸ்தான் அணி ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என தென்னாப்பிரிக்க அணி வென்ற நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. 

முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டர்பனில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வென்றது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, 203 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய தென்னாப்பிரிக்க பவுலர் ஃபெலுக்வாயோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

204 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணி, 80 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் வாண்டர் டசன் நிலைத்து ஆடினார். 5 விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு வாண்டர் டசனுடன் ஜோடி சேர்ந்த  ஃபெலுக்வாயோ சிறப்பாக ஆடினார். பவுலிங்கில் மிரட்டிய ஃபெலுக்வாயோ பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். வாண்டர் டசன் - ஃபெலுக்வாயோ ஜோடியை பாகிஸ்தான் அணியால் பிரிக்க முடியவில்லை. இருவருமே கடைசி வரை நின்று தென்னாப்பிரிக்க அணியை வெற்றி பெற செய்தனர். 

பவுலிங்கில் மட்டுமல்லாமல் ஃபெலுக்வாயோ பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டதை பொறுக்க முடியாத பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ், இன ரீதியாக அவரை தாக்கினார். மிகவும் கீழ்த்தரமாக ஃபெலுக்வாயோவின் நிறத்தை குறிப்பிட்டு சர்ஃப்ராஸ் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. ஐசிசி விதிப்படி இன ரீதியான தாக்குதல் குற்றமாகும். எனவே பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. 

திறமையுடன் மோதாமல், கீழ்த்தரமாக இனரீதியான தாக்குதலை கையாண்டு தரந்தாழ்ந்து விட்டார் பாகிஸ்தான் கேப்டன். சர்ஃபராஸின் தரந்தாழ்ந்த செயல், சர்ச்சையை கிளப்பியதோடு கடும் விமர்சனங்களையும் வாரி குவித்துவருகிறது.