விராட் கோலியின் உடல்மொழியின் வாயிலாக அவரது எண்ண ஓட்டத்தை கண்டறிந்து அதற்கேற்றாற்போல பந்துவீசி அவரது விக்கெட்டை வீழ்த்திய சுவாரஸ்ய சம்பவத்தை பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் பகிர்ந்துள்ளார். 

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தானிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இந்திய அணி கோப்பையை இழந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் அபாரமாக ஆடி சதம் விளாசினார். அசார் அலி மற்றும் முகமது ஹஃபீஸ் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். அதனால் அந்த அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களை குவித்தது. 

339 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவை தவிர மற்ற வீரர்கள் யாருமே சோபிக்காததால், வெறும் 158 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டாகி, 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அந்த சமயத்தில் அபாரமான ஃபார்மில் இருந்த தவான், ரோஹித், கோலி ஆகிய முதல் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியது பாகிஸ்தான் பவுலர் முகமது ஆமிர்.

இந்நிலையில், இவர் விராட் கோலியை வீழ்த்தியது எப்படி என்ற ரகசியத்தை பகிர்ந்துள்ளார். விராட் கோலியின் மனநிலையுடனும் அவரது சிந்தனையுடனும் ஆடியது குறித்து பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள முகமது ஆமிர், ரோஹித் சர்மா நான் வீசிய இன்ஸ்விங் பந்தில் தான் அவுட்டானார். இதையடுத்து களத்திற்கு வந்த கோலி, களத்தில் நிலைப்பதற்கு முன்னதாக சில அவுட் ஸிவிங் பந்துகளில் திணறினார். நான் வீசிய பந்தில் கோலி ஒரு கேட்ச் கொடுத்தார். ஆனால் அதை அசார் அலி தவறவிட்டார். அப்போது என் மனதில் ஓடியது எல்லாம் ஒரே ஒரு விஷயம்தான். கோலி போன்ற வீரர்களுக்கு கேட்ச்களை தவறவிடக்கூடாது. அப்படி விட்டுவிட்டால், அவர் இறுதி வரை நின்று ஆட்டத்தை வெற்றிகரமக முடிக்க வல்லவர். அதனால் அவரது விக்கெட்டை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று வேண்டிக்கொண்டே அடுத்த பந்தை வீச சென்றேன். 

நான் அடுத்த பந்தை வீச செல்லும்போது, இன்ஸ்விங்தான் வீச போகிறேன் என்று விராட் கோலி கணித்திருந்ததை அவரது உடல்மொழியே காட்டியது. அதனால் இன்ஸ்விங்கிற்கு தயாராக இருந்தார் கோலி. ஆனால் அப்போது நான் அவுட் ஸ்விங் வீசினேன். கோலி கேட்ச் கொடுத்து அவுட்டானார் என்று முகமது ஆமிர் தெரிவித்துள்ளார்.