இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை ஒட்டி இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடைபெற்றுவருகிறது.

கேப்டன் விராட் கோலி, தோனி, பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகிய மூன்று தமிழக வீரர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டது.

கடந்த 6ம் தேதி இந்தியா-இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்தியாவிடமிருந்து ஒரே ஒரு ஓவரில் இலங்கை அணி வெற்றியை பறித்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ரோஹித் சர்மா, ரெய்னா ஆகியோரின் விக்கெட்டுகளை முதல் இரண்டு ஓவரிலேயே இழந்தபோதிலும் 174 ரன்கள் குவித்தது. 190 ரன்கள் எடுத்திருந்திருக்கலாம். கடைசி ஓவர்களில் மந்தமான ஆட்டத்தால், 174 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டி20 போட்டியை பொறுத்தவரை நல்ல ரன் தான்.

இதையடுத்து 175 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் முதல் விக்கெட்டை இரண்டாவது ஓவரிலேயே வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். 

ஆனால், அதற்கு அடுத்த ஓவரிலேயே ஆட்டம் இலங்கை பக்கம் திரும்பியது. அதன்பிறகு இந்திய அணியால் ஆட்டத்துக்குள் வரவே முடியவில்லை. ஷர்துல் தாகூர் வீசிய மூன்றாவது ஓவரில், 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என 26 ரன்கள் விளாசினார் குசால் பெரேரா. ஒரு நோ-பாலுடன் சேர்த்து மூன்றாவது ஓவரில் மட்டும் 27 ரன்கள் குவிக்கப்பட்டன.

அந்த ஒரு ஓவரில் ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்த இலங்கை, இறுதியாக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றிபெற்றது.

தாகூர் வீசிய மூன்றாவது ஓவர்தான் இந்திய அணி வெற்றியை இழந்ததற்கான முக்கியமான காரணம்.