- Home
- Sports
- Sports Cricket
- நியூசிலாந்து அணியில் வேலூர் இளைஞர்.. ரஜினியின் வெறித்தனமான ரசிகர்.. யார் இந்த ஆதித்யா அசோக்!
நியூசிலாந்து அணியில் வேலூர் இளைஞர்.. ரஜினியின் வெறித்தனமான ரசிகர்.. யார் இந்த ஆதித்யா அசோக்!
சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஆதித்யா, நியூசிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்தியா, நியூசிலாந்து தொடர்
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி வதோராவில் இன்று தொடங்கியுள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 300 ரன்கள் குவித்துள்ளது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்த ஒரு வீரரின் பெயர் அதிக கவனம் ஈர்த்துள்ளது.
நியூசிலாந்து அணியில் வேலூர் இளைஞர்
அவர் வேறு யாருமல்ல, இந்திய வம்சாவளியான நமது தமிழ்நாட்டை சேர்ந்த லெக் ஸ்பின்னர் ஆதித்யா அசோக். தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்த ஆதித்யா அசோக், தனது நான்கு வயது வரை இந்தியாவில்தான் இருந்தார். அதன்பிறகு, அவரது பெற்றோர் வேலை நிமித்தமாக ஆக்லாந்திற்கு குடிபெயர்ந்தனர். சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஆதித்யா, அங்குள்ள உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
நியூசிலாந்தின் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்
இதன் விளைவாக, 2020ஆம் ஆண்டுக்கான U-19 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியில் இடம்பிடித்தார். இதைத் தொடர்ந்து, 2021-ல் ஆக்லாந்து அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் நம்பகமான பந்துவீச்சாளராக வளர்ந்தார். பின்னர், 2022-23ஆம் ஆண்டில் நியூசிலாந்தின் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் வென்றார்.
சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை
ஆதித்யா அசோக், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். சில மாதங்களுக்குப் பிறகு, வங்கதேசத்திற்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன்பிறகு, காயம் காரணமாக சிறிது காலம் அணியில் இருந்து விலகியிருந்தார். இதுவரை மூன்று சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஆதித்யா அசோக், இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் ஆதித்யா அசோக்கிற்கு அளவற்ற பிரியர். அவர் கையில், ரஜினியின் புகழ்பெற்ற 'படையப்பா' பட வசனமான 'என் வழி, தனி வழி' என்பதை தமிழில் டாட்டூவாக குத்தியுள்ளார். இந்தியாவிற்கு எதிரான தொடருக்கு முன்பு, ஆதித்யா அசோக் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியில் சில வாரங்கள் பயிற்சி மேற்கொண்டார். தற்போது இந்தியாவிற்கு எதிரான தொடரில் அவர் எப்படி பந்துவீசுவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

