3 முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக கடந்த சீசனில் செயல்பட்ட மலிங்கா, இந்த சீசனில் மீண்டும் அந்த அணிக்காக பந்துவீச உள்ளார். 

இதுவரை 11 ஐபிஎல் சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்குகிறது. அதற்கான ஏலம் இன்று ஜெய்ப்பூரில் நடந்துவருகிறது. இதுவரை நடந்துள்ள 11 சீசனில் 3 முறை மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது.

ஹர்திக் பாண்டியா, கீரன் பொல்லார்டு, மலிங்கா ஆகியோர் மும்பை அணியின் செல்ல பிள்ளைகளாக திகழ்கின்றனர். அந்த அணிக்கு பல தருணங்களில் வெற்றியை தேடித்தந்த வெற்றி நாயகர்களாக இவர்கள் திகழ்கிறார்கள். எனவே இவர்களை எல்லாம் அந்த அணி விட்டுக்கொடுப்பதேயில்லை. 

மலிங்கா அந்த அணியின் நட்சத்திர பவுலராக திகழ்ந்தவர். மலிங்கா முன்பு செய்த வேலையை தற்போது மும்பை அணிக்கு பும்ரா செய்துவருகிறார். எனினும் மலிங்கா கடந்த சீசனில் மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தார். கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கே மும்பை அணி முன்னேறவில்லை. 

இந்நிலையில், இந்தமுறை மீண்டும் களம் காண்கிறார் மலிங்கா. கடந்த முறை பவுலிங் பயிற்சியாளராக இருந்த மலிங்காவை, இந்தமுறை 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது மும்பை அணி. எனவே அடுத்த சீசனில் பவுலராக களம் கண்டு மீண்டும் எதிரணி வீரர்களை மிரட்ட வந்துவிட்டார் மலிங்கா. மலிங்காவும் பும்ராவும் சேர்ந்து கண்டிப்பாக அடுத்த சீசனில் எதிரணியை துவம்சம் செய்வர் என்பது உறுதியாகிவிட்டது.