டி20 லீக் தொடர்களை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் 10 ஓவர்களை கொண்ட டி10 லீக் தொடர் ஆடப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு டி10 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. 8 அணிகள் கலந்துகொண்டு ஆடும் இந்த தொடரில் உலகின் முன்னணி வீரர்களும் முன்னாள் வீரர்களும் கலந்துகொண்டு ஆடிவருகின்றனர். 

கடந்த 21ம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் டிசம்பர் 2ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் ஏற்கனவே ஒரு போட்டியில் ஆஃப்கான் வீரர் ஷேஷாத் 16 பந்துகளில் 74 ரன்களை குவித்து மிரட்டினார். இந்நிலையில், நேற்று நடந்த ஒரு போட்டியில் நார்தர்ன் வாரியர்ஸ் அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 

10 ஓவர் போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி என்பது மிகவும் வியப்பான விஷயம். நார்தர்ன் வாரியர்ஸ் மற்றும் பஞ்சாபி லெஜண்ட்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் நார்தர்ன் வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் நிகோலஸ் பூரான் 25 பந்துகளில் 2 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் என மொத்தம் 77 ரன்களை குவித்தார். இவரது அடியே பரவாயில்லை எனும் வகையில் அடித்து நொறுக்கினார் ஆண்ட்ரே ரசல். வெறும் 9 பந்துகளை எதிர்கொண்ட ஆண்ட்ரே ரசல், 6 சிக்ஸர்களை விளாசி 38 ரன்களை குவித்தார். மற்றொரு வீரர் ரோமன் பவல், 5 பந்துகளில் 21 ரன்களை குவிக்க, நார்தர்ன் வாரியர்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை குவித்தது. 

அந்த அணியின் லைவ் இன்னிங்ஸே ஹைலைட்ஸ் மாதிரி இருந்தது. பூரானும் ரசலும் சேர்ந்து சிக்ஸர் மழை பொழிந்தனர். 10 ஓவரில் 19 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் உட்பட 183 ரன்களை குவித்தது வாரியர்ஸ் அணி. அந்த வீடியோ..

20 ஓவரில் 184 ரன்கள் என்பதே மிகப்பெரிய இலக்கு. அப்படியிருக்கையில் வெறும் 10 ஓவர்களில் 183 ரன்களை குவித்து மிரட்டியது வாரியர்ஸ் அணி. இதையடுத்து 184 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் லெஜண்ட்ஸ் அணி 10 ஓவர் முடிவில் வெறும் 84 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதையடுத்து நார்தர்ன் வாரியர்ஸ் அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.