டி10 லீக் தொடரின் இறுதி போட்டியில் பாக்டூன்ஸ் அணியை வீழ்த்தி தொடரை வென்றது நார்தர்ன் வாரியர்ஸ் அணி. 

டி20 லீக் தொடரை போல டி10 லீக் தொடரும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தொடர் கடந்த நவம்பர் 21ம் தேதி தொடங்கி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவந்தது. 

இந்த தொடரின் இறுதி போட்டி நேற்று ஷார்ஜாவில் நடந்தது. இதில் டேரன் சமி தலைமையிலான நார்தர்ன் வாரியர்ஸ் அணியும் ஷாகித் அஃப்ரிடி தலைமையிலான பாக்டூன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நார்தர்ன் வாரியர்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் நிகோலஸ் பூரான் இந்த முறை 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். 

இந்த தொடரின் பல போட்டிகளில் மிரட்டலான பேட்டிங் ஆடிய பூரான் இம்முறை ஏமாற்ற, அந்த வேலையை செவ்வனே செய்தார் ரோமன் பவல். அதிரடியாக ஆடிய அவர் 25 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்களை குவித்தார். ஆண்ட்ரே ரசலும் அதிரடியாக ஆடி 12 பந்துகளில் 38 ரன்களை குவித்தார். அதனால் நார்தர்ன் வாரியர்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 140 ரன்களை குவித்தது. 

141 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பாக்டூன்ஸ் அணி வீரர்கள் தங்களால் முடிந்தவரை அடித்து ஆடி போராடினர். ஆனால் யாருமே பெரிய இன்னிங்ஸை ஆடவில்லை என்பதால் அந்த அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. 10 ஓவர் முடிவில் 118 ரன்களை மட்டுமே எடுத்தது அந்த அணி. 

இதையடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நார்தர்ன் வாரியர்ஸ் அணி டி10 தொடரை வென்று அசத்தியது.