நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி கடுமையாக போராடி கடைசியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்க ஜோடியான முன்ரோ - சேஃபெர்ட்டின் அதிரடியான தொடக்கம் மற்றும் கோலின் டி கிராண்ட்ஹோமின் அதிரடி ஆகியவற்றின் விளைவாக 212 ரன்களை குவித்தது. 

213 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு களத்திற்கு வந்த விஜய் சங்கர், அதிரடியாக ஆடினார். பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர், அதேநேரத்தில் அடித்து ஆடவும் தவறவில்லை. 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 43 ரன்களை குவித்து சாண்ட்னெரின் பந்தில் ஆட்டமிழந்தார். இஷ் சோதி வீசிய 8வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை அடித்து மிரட்டினார் விஜய் சங்கர். மூன்றாம் வரிசையில் ஆட கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அடித்து ஆடி மீண்டும் ஒருமுறை தனது திறமையை நிரூபித்தார் விஜய் சங்கர். 

அதற்கடுத்து களத்திற்கு வந்த ரிஷப் பண்ட், முதல் பந்திலேயே பவுண்டரியும் அடுத்த 2 பந்துகளிலுமே சிக்ஸர் என முதல் 3 பந்துகளில் 16 ரன்களை குவித்து நியூசிலாந்து அணியை அச்சுறுத்தினார். இஷ் சோதியின் 10வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினார். அதிரடியாக ஆடி 12 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 28 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார் ரிஷப் பண்ட். 

அதன்பிறகு களத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா, ரிஷப்பாவது முதல் பவுண்டரிதான் அடிப்பான்.. நான் சிக்ஸரே அடிப்பேன் தெரியும்ல என்கிற ரீதியில் முதல் பந்திலேயே சிக்ஸரடித்து நியூசிலாந்து அணியை மேலும் அச்சுறுத்தினார். விக்கெட்டுகள் சரிந்தாலும் அடுத்தடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட நியூசிலாந்து வீரர்கள் ஆடித்தான் போய்விட்டனர். ரோஹித் சர்மா 38 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிவந்த ஹர்திக்கும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். தோனியும் அவுட்டாக அதன்பிறகு தினேஷ் கார்த்திக்கும் குருணல்  பாண்டியாவும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்ட அதே வேளையில், அடித்தும் ஆடினர்.

இருவரும் சிறப்பாக ஆடி இலக்கை நோக்கி அணியை இட்டுச்சென்றனர். 17 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 165 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 3 ஓவர்களில் 48 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டிம் சௌதி வீசிய 18வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி இந்திய அணியின் வெற்றி நம்பிக்கையை அதிகரித்தார் குருணல் பாண்டியா. போட்டியின் முடிவை தீர்மானிக்கக்கூடிய 19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸரும் குருணல் பாண்டியா ஒரு சிக்ஸரும் என 14 ரன்களை குவித்தனர். 

இதையடுத்து கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. டிம் சௌதி வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக், அடுத்த இரண்டு பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 4வது பந்தில் ஒரு ரன் அடிக்க, ஐந்தாவது பந்தில் குருணல் ஒரு ரன் அடித்தார். கடைசி பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை வைடாக போட்டார் சௌதி. கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து போட்டியை கெத்தாக முடித்தாலும் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்த வெற்றியை அடுத்து 2-1 என நியூசிலாந்து அணி டி20 தொடரை வென்றது.