இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கை ஓங்கியிருக்கிறது. இந்த போட்டியில் விராட் கோலியை வைத்து ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயன் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா -  ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 250 ரன்களை எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 15 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 323 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து ஆடிவருகிறது.

இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் விராட் கோலியை களத்தில் நிலைத்துவிடாமல் விரைவாகவே வீழ்த்திவிட்டனர் ஆஸ்திரேலிய பவுலர்கள். முதல் இன்னிங்ஸில் 3 ரன்களிலேயே வெளியேறிய கோலி, இரண்டாவது இன்னிங்ஸில் சற்றுநேரம் களத்தில் நீடித்து 34 ரன்களை எடுத்தார். எனினும் நாதன் லயன் கோலியை வீழ்த்திவிட்டார்.

கோலியை வீழ்த்தியதன் மூலம் வழக்கமாக சாதனைகளை குவிக்கும் சாதனை நாயகன் கோலியை வைத்தே சாதனை செய்துள்ளார் நாதன் லயன். கோலியை லயன் வீழ்த்தியது இது 6வது முறை. இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் கோலியை அதிகமுறை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை நாதன் லயன் படைத்துள்ளார். லயனுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரும் தலா 5 முறை வீழ்த்தி இரண்டாமிடத்தில் உள்ளனர்.