இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை வீழ்த்திவிட்டால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மளமளவென சரிந்துவிடுகிறது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் விமர்சித்துள்ளார். 

தற்போதைய இந்திய அணி, விராட் கோலியை மட்டுமே நம்பியிருக்கிறது. கோலியை மட்டுமே சார்ந்திருப்பது அணிக்கு நல்லதல்ல. கோலி மட்டுமே அனைத்து போட்டிகளிலுமே அணிக்கு தனது சிறப்பான பங்களிப்பை அளித்துவருகிறார். 

கோலியை தவிர வேறு எந்த வீரரும் தொடர்ச்சியாக நிலையாக ஆடுவதில்லை. அதனால்தான் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்திய அணி இழந்தது. கோலியை தவிர ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் ஓரளவிற்கு பங்களிப்பு செய்கின்றனர். மற்றபடி எந்த வீரரும் சரியாக ஆடவில்லை. இதுவரை நடந்துள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் கோலி மட்டுமே 544 ரன்களை குவித்துள்ளார்.

இந்திய அணியில் 6,7,8வது வரிசை வீரர்கள் சரியாக ஆடுவதில்லை. ஆனால் இங்கிலாந்தின் நிலை அப்படியல்ல. சாம் கரன், பட்லர், ஸ்டோக்ஸ், வோக்ஸ், மொயின் அலி என பின்வரிசை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி அந்த அணியை மீட்டெடுக்கின்றனர். அவர்களின் சிறப்பான ஆட்டம்தான் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கிறது. 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என இங்கிலாந்து அணி வென்றுள்ள நிலையில், ஸ்கை ஸ்போர்ட்ஸ் இணையதளத்துக்கு பேட்டியளித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன், இந்திய அணியை கிண்டல் செய்யும் விதமாக பேசியுள்ளார். 

அந்த பேட்டியில் பேசிய நாசர் ஹூசைன், இந்த தொடர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது பட்லர், ஸ்டோக்ஸ், வோக்ஸ், சாம் கரன் ஆகியோரால் என்று கூறுகிறேன். லார்ட்ஸில் வோக்ஸ் அடித்த சதம், நான்காவது போட்டியில் மொயின் அலி, சாம் கரன் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் ஆகியவை தான் போட்டியின் முடிவை தீர்மானித்தன. 

இங்கிலாந்து அணியில் மிடில் ஆர்டர்கள் சிறப்பாக ஆடுகின்றனர். அதற்கு முற்றிலும் மாறாக இந்திய அணியில் கோலியை தூக்கிவிட்டால் அவ்வளவுதான். மொத்த அணியும் மளமளவென சரிந்துவிடுகிறது. மிடில் ஆர்டர்தான் இங்கிலாந்து அணியின் பலம். அதனால்தான் 2014ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அணி, உள்நாட்டில் எந்த தொடரையும் இழக்கவில்லை. ஆனால் அதேநேரத்தில் இங்கிலாந்து அணியிலும் சில விஷயங்களை மேம்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு செல்லும்போது மொயின் அலியை முன்னணி ஸ்பின்னராக அழைத்து செல்ல முடியாது. கிறிஸ் வோக்ஸை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக அழைத்து செல்ல முடியாது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் தேவை என நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.