மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்.

மியாமி ஓபன் டென்னிஸ் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸை எதிர்கொண்டார் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்.

முதல் செட் ஆட்டத்தில் வீனஸ் 5-0 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தார். எனினும், அந்த செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. அந்த செட்டை 5-7 என்ற கணக்கில் போராடி வென்றார் கிகி. ஆனால், இரண்டாவது செட்டை 3-6 என்ற கணக்கில் வீனஸிடம் கிகி பறிகொடுத்தார். 

வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது செட் ஆட்டத்தில் 7-5 என்ற கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு வென்றார் வீனஸ். 

நடப்பு சாம்பியனான ஜோகன்னாவும், மியாமி ஓபனில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள வீனஸும் மோதும் 4-வது சுற்று ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதனிடையே, மியாமி ஓபனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ரஷியாவின் எம்.யூஸ்னியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றான 4-வது சுற்றுக்கு முன்னேறினார் அமெரிக்காவின் ஜான் இஸ்னர். 

இதேபோல், போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஆர்ஜென்டீனாவின் ஜே.மார்ட்டின் டெல் போட்ரோவும் 4-வது சுற்றுக்கு  முன்னேறினார்.