மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் சாம்பியன் வென்று அசத்தினார். 

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில், போட்டித் தரவரிசையில் 13-வது இடத்தில் இருந்த ஸ்டீபன்ஸூம், போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த லாத்வியாவின் ஜெலினா ஒஸ்டாபென்கோவும் மோதினர். 

இந்த ஆட்டத்தின் முடிவில் ஸ்டீபன்ஸ் 7-6(7/5), 6-1 என்ற செட்களில் வெற்றி பெற்றார். அமெரிக்க ஓபன் நடப்பு சாம்பியனான ஸ்டீபன்ஸ், தற்போது உலகின் 12-ஆம் நிலை வீராங்கனையாக உள்ளார். இந்த வெற்றியை அடுத்து, இன்று வெளியாகும் புதிய தரவரிசையின்போது அவர் முதல் 10 இடங்களுக்குள்ளாக முன்னேறுவார். 

வெற்றிக்குப் பிறகு ஸ்டீபன்ஸ், "ஜெலினாவுக்கு எதிரான இறுதிச்சுற்று கடினமானதாக இருக்கும் என்று அறிந்திருந்தேன். ஆட்டத்தின் தொடக்கத்தில் சற்று தடுமாறினேன். ஆனால் முதல் செட்டை கைப்பற்றிய பிறகு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது. தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள்ளாக வருவது நீண்டநாள் கனவு.
 
ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்குப் பிறகு காயம் காரணமாக செய்துகொண்ட அறுவைச் சிகிச்சையால் சற்று பின்னடைவை சந்தித்தாலும், அதைத் தொடர்ந்து வந்த வாய்ப்புகள் நான் மீண்டு வருவதற்கு உதவின" என்று அவர் கூறினார்.