Mexico Open tennis Juan Martin Del Potro wins 21st ATP Tour

மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ்: 21-ஆவது ஏடிபி டூர் பட்டம் வென்றார் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ...

மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ சாம்பியன் வென்றார்.

மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ் போட்டி மெக்ஸிகோவில் நடைபெற்றது. இப்போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் உலகின் 9-ஆம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் டெல் போட்ரோவும், 8-ஆம் நிலை வீரரான தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சனும் மோதினர்.

இந்த ஆட்டத்தில் ஆன்டர்சனை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி டெல் போட்ரோ சாம்பியன் வென்றார். இது அவரது 21-ஆவது ஏடிபி டூர் பட்டமாகும்.

இதுவரை 7 முறை ஆன்டர்சனை எதிர்கொண்ட டெல் போட்ரோ, தனது 7-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

கடந்த ஆண்டு ஸடாக்ஹோம் டென்னிஸ் போட்டியில் பட்டத்தை தக்கவைத்த பிறகு, டெல் போட்ரோ வெல்லும் முதல் பட்டம் இதுவாகும்.

அதேபோன்று, ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரிட்டனின் ஜேமி முர்ரே - பிரேஸிலின் புருனோ சோரஸ் இணை, 7-6(7/4), 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்க சகோதரர்களான பாப் பிரயன் - மைக் பிரயன் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.