Messi vs Ronaldo Auction: கால்பந்து உலகின் இருபெரும் ஜாம்பவான்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஜெர்சிகள் ஒரே நேரத்தில் ஏலம் விடப்பட்டன. இதில் யாருடைய ஜெர்சி அதிக விலைக்கு ஏலம் போனது? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

கால்பந்து களத்தில் மட்டுமல்ல, ஏலக்களத்திலும் கூட லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) இடையேயான போட்டி தொடர்கிறது. சமீபத்தில் நடந்த ஒரு ஏலத்தில், இருவரது ஜெர்சிகளும் விற்பனைக்கு வந்தன. இதில், ரொனால்டோவை மெஸ்ஸி மீண்டும் ஒருமுறை முந்திச் சென்றுள்ளார்.

மெஸ்ஸி vs ரொனால்டோ ஜெர்சி ஏலம்

மெஸ்ஸி, பார்சிலோனா அணிக்காக விளையாடியபோது அணிந்திருந்த, அவரே கையெழுத்திட்ட ஜெர்சி ஒன்று $66,107 அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது. இந்திய மதிப்பில் இது சுமார் 55 லட்சம் ரூபாய். அதே ஏலத்தில், ரொனால்டோவின் ஜெர்சி $10,601 டாலருக்கு (சுமார் 8.8 லட்சம் ரூபாய்) மட்டுமே விற்பனையானது. இது மெஸ்ஸியின் ஜெர்சி விலையை விட ஆறு மடங்குக்கும் மேல் குறைவு.

இந்த இரண்டு ஜெர்சிகளும், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மசாஜ் நிபுணரான ராட் தார்ன்லியின் (Rod Thornley) தனிப்பட்ட சேகரிப்பில் இருந்தவை. அவர்தான் இப்போது இவற்றை ஏலத்தில் விட்டுள்ளார்.

இதையும் படிங்க:Manav Suthar: சுழலில் இலங்கையை சுருட்டிய மானவ் சுதார்! காலே டெஸ்டில் இந்தியா அபார வெற்றி

10 வருடங்களுக்கு மேலான பழைய ஜெர்சிகள்

ஏலத்தில் போன மெஸ்ஸியின் ஜெர்சி, ஆகஸ்ட் 2012-ல் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிராக பார்சிலோனா விளையாடிய ஒரு நட்புப் போட்டியின்போது அவர் அணிந்திருந்தது. அந்தப் போட்டி கோல் எதுவும் இல்லாமல் டிராவில் முடிந்தது. போட்டிக்குப் பிறகு, மெஸ்ஸி அந்த ஜெர்சியில் கையெழுத்திட்டு தார்ன்லியிடம் கொடுத்தார்.

போட்டிக்கு முன்பே, பார்சிலோனாவின் அப்போதைய வீரரான ஜெரார்ட் பிக்கேவிடம் மெஸ்ஸியின் ஜெர்சியை வாங்கித் தருமாறு தார்ன்லி கேட்டிருக்கிறார். போட்டி முடிந்ததும், பிக்கே அவரை பார்சிலோனா டிரஸ்ஸிங் ரூமிற்கு அழைத்துச் சென்றார். அங்கே, மெஸ்ஸி தான் அணிந்திருந்த ஜெர்சியைக் கழற்றி, அதில் கையெழுத்திட்டு தார்ன்லியிடம் கொடுத்து, கை குலுக்கியுள்ளார்.

ரொனால்டோவின் ஜெர்சி

மறுபுறம், ரொனால்டோவின் ஜெர்சி, அவர் ரியல் மாட்ரிட்அணிக்காக 2014-15 சீசனில் ஒரு போட்டியில் அணிவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அவர் அந்த ஜெர்சியை அணியவில்லை. பின்னர், தார்ன்லிக்கு ஒரு தனிப்பட்ட செய்தியுடன் அந்த ஜெர்சியை ரொனால்டோ பரிசாக வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க: TNPL: கோவை கிங்ஸ் அசத்தல் சேஸ்.. சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

தார்ன்லியின் பிரம்மிக்க வைக்கும் சேகரிப்பு

மான்செஸ்டர் யுனைடெட் அணியில் நீண்டகாலம் பணியாற்றியதால், உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களின் ஜெர்சிகள் மற்றும் நினைவுப் பரிசுகளை சேகரிக்கும் வாய்ப்பு தார்ன்லிக்கு கிடைத்தது. மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவின் இந்த ஜெர்சிகள், அவரது பிரம்மாண்ட சேகரிப்பின் ஒரு சிறு பகுதிதான். தற்போது அந்த சேகரிப்பிலிருந்து ஒரு ஜோடி ஜெர்சிகள் ஏலத்திற்கு வந்துள்ளன.

இந்த வரலாற்று சிறப்புமிக்க ஏலம் MatchWornShirt என்ற விளையாட்டுப் பொருட்களுக்கான பிரபல ஏல வலைத்தளத்தில் நடைபெற்றது. ராட் தார்ன்லி தனது சேகரிப்பில் இருந்து மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவின் ஜெர்சிகள் தவிர, மான்செஸ்டர் யுனைடெட் அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘Class of 92’ வீரர்களின் பல ஜெர்சிகளையும் ஏலத்தில் விட்டிருந்தார்.