- Home
- Sports
- Football
- Cristiano Ronaldo : 'CR7' சுல்தான் ஓய்வு.. கால்பந்துக்கு 'குட்பை' சொன்ன 'சூப்பர் ஸ்டார்' கிறிஸ்டியானோ ரொனால்டோ!
Cristiano Ronaldo : 'CR7' சுல்தான் ஓய்வு.. கால்பந்துக்கு 'குட்பை' சொன்ன 'சூப்பர் ஸ்டார்' கிறிஸ்டியானோ ரொனால்டோ!
Cristiano Ronaldo: கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். அவர் படைத்த சாதனைகளை விரிவாக பார்ப்போம்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வு
போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 41 வயதான ரொனால்டோ, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், '23 ஆண்டுகளாக தேசிய அணிக்காக தான் அணிந்து வந்த புகழ்பெற்ற ‘எண் 7’ ஜெர்சியை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மிகச்சிறந்த வீரர்
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முகமாக ரொனால்டோ இருந்து வருகிறார். அவரது தலைமையில், போர்ச்சுகல் சர்வதேச கால்பந்தில் பல மறக்க முடியாத வெற்றிகளைப் பெற்றுள்ளது. நாட்டுக்காக அவர் அடித்த கோல்களும், படைத்த சாதனைகளும் கால்பந்து வரலாற்றில் சிறந்த வீரர்களில் ஒருவராக அவருக்கு இடமளித்துள்ளன.
அக்டோபர் மாதம் தேசிய அணியின் முகாமில் இருந்து அவர் வெளியேறியதை அடுத்து, அவரது ஓய்வு குறித்த வதந்திகள் எழுந்தன. இருப்பினும், தண்டனை அனுபவித்த பிறகும் நாட்டுக்காக விளையாட தயாராக இருப்பதாக அவர் அப்போது கூறியிருந்தார். நார்வேக்கு எதிரான போர்ச்சுகலின் நேஷன்ஸ் லீக் வெற்றிப் போட்டியில் ரொனால்டோவை பெஞ்சில் உட்கார வைத்த பிறகு இந்த சர்ச்சை தொடங்கியது.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனைகள்
இந்த நிலையில் தான் சர்வதேச கால்பந்துக்கு குட்பை சொல்லியுள்ளார் கால்பந்தின் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஆகஸ்ட் 2003-இல் போர்ச்சுகல் தேசிய அணியில் தனது பயணத்தை தொடங்கிய ரொனால்டோ, 234 போட்டிகளில் பங்கேற்று 146 கோல்கள் அடித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச கால்பந்தில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் மற்றும் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையுடன் ஓய்வு பெறுகிறார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. யூரோ 2016 தொடரில் போர்ச்சுகலை முதல் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல வழிநடத்தினார். நேஷன்ஸ் லீக் 2019 தொடரில் கேப்டனாக இந்த தொடரின் முதல் பட்டத்தை பெற்றுத் தந்தார். 2025 ல் போர்ச்சுகல் தங்களது இரண்டாவது நேஷன்ஸ் லீக் பட்டத்தை வெல்ல உதவினார். இவர் அடித்த 146 கோல்கள் ஆண்கள் சர்வதேச கால்பந்தில் எந்த வீரரையும் விட அதிகம். 2026 உலகக் கோப்பையில் கோல் அடித்ததன் மூலம், 6 வெவ்வேறு உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
ரொனால்டோவின் உருக்கமான பதிவு
''இலக்குகள் மங்கக்கூடும், கோப்பைகள் அருங்காட்சியகங்களை சென்றடையலாம், சாதனைகளும் எப்போதாவது முறியடிக்கப்படலாம். ஆனால், மக்களின் இதயங்களில் நாம் பிடிக்கும் இடத்தை எந்தக் காலத்தாலும் அழிக்க முடியாது. 23 ஆண்டுகளாக இந்த சட்டையை அணிந்து எனது நாட்டிற்காக விளையாடியதை மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன். இந்த முடிவு எளிதானது அல்ல, இருப்பினும் எதிர்கால தலைமுறைக்கு வழிவிட வேண்டிய தருணம் என மகிழ்ச்சியுடன் விடைபெறுகிறேன்'' என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து ஓய்வு பெற்ற கால்பந்து ஜாம்பவான்கள்
அண்மையில் கால்பந்து உலகின் ஜாம்பவான் அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார். இப்போது அவரது போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கால்பந்துக்கு டாட்டா காட்டியுள்ளது கால்பந்து ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.





