ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலத்தில் விலைபோகாத பிரண்டன் மெக்கல்லம், மறைமுகமாக ஒரு செய்தியை சொல்லியுள்ளார். அந்த செய்தி, ஏற்கனவே அவரை ஏலத்தில் எடுக்காததால் அதிர்ச்சியில் இருக்கும் அவரது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலம் கடந்த 18ம் தேதி ஜெய்ப்பூரில் நடந்தது. அந்த ஏலத்தில் சில பெரிய வீரர்கள் விலைபோகவில்லை. முதல் சுற்று ஏலத்தில் அடிப்படை விலைக்குக்கூட ஏலம் போகாத யுவராஜ் சிங்கை இரண்டாவது சுற்றில் மும்பை அணி அடிப்படை விலைக்கு எடுத்தது. 

ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி வீரருமான பிரண்டன் மெக்கல்லம் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்குக்கூட ஏலம் போகவில்லை. அவரை எடுக்க எந்த அணியுமே ஆர்வம் காட்டவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பெரும்பாலானோருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. 

ஐபிஎல் வரலாற்றில் முதல் போட்டியிலேயே சதமடித்தவர் மெக்கல்லம். அவர் அடித்த 158 ரன்கள் என்பது தான் 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல்லின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதை 2013 ஐபிஎல்லில்தான் கெய்ல் முறியடித்தார். கெய்லுக்கு அடுத்து மெக்கல்லமின் அந்த ஸ்கோர் தான் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட மெக்கல்லமிற்கு வயதும் அதிகமாகிவிட்டதால், அவர் முன்புபோல் அதிரடியாக ஆடுவதில்லை. 

கடந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்புடன் அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எடுத்தது. ஆனால் கடந்த சீசனில் மெக்கல்லம் சரியாக ஆடவில்லை. 6 போட்டிகளில் ஆடி வெறும் 127 ரன்களை மட்டுமே எடுத்தார். இதையடுத்து அவரை கழட்டிவிட்டது பெங்களூரு அணி. கடந்த சீசனில் அவர் சரியாக ஆடாத நிலையில் இந்த சீசனில் அவரை அனைத்து அணிகளும் புறக்கணித்தன. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரண்டன் மெக்கல்லம், எல்லா நல்ல விஷயங்களும் இப்படித்தான் முடிவுக்கு வரும். நான் ஏலத்தில் எடுக்கப்படாதது குறித்து பெரிதாக வருத்தப்படவில்லை. ஏனென்றால் இதுதான் எதார்த்தம். சில நியூசிலாந்து வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் என்று மெக்கல்லம் தெரிவித்துள்ளார். 

கடந்த 2016ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற மெக்கல்லம், டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார். 11 ஐபிஎல் சீசன்களிலும் ஆடியுள்ள மெக்கல்லம், சில நல்ல விஷயங்கள் இப்படித்தான் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளதன் மூலம் ஐபிஎல்லிலிருந்து அவர் ஒதுங்குகிறாரா என்ற ஐயத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவரது அதிரடி பேட்டிங்கிற்கு அடிமையாகப்போன ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.