- Home
- Sports
- Sports Cricket
- IPL: தோனி முதல் ரிஷப் பண்ட் வரை.. ஐபிஎல்லில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட்!
IPL: தோனி முதல் ரிஷப் பண்ட் வரை.. ஐபிஎல்லில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட்!
Top IPL Buys: ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 16ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தோனி முதல் ரிஷப் பண்ட் வரை அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஐபிஎல் மினி ஏலம்
ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் 16ம் தேதி அன்று அபுதாபியில் நடைபெற உள்ளது. வெறும் 77 இடங்களுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வீரர்கள் என 350 பேர் போட்டியிடுகின்றனர். 31 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2008ல் தல தோனி ரூ.6 கோடிக்கு ஏலம்
ஐபில் தொடர் 2008ம் ஆண்டு வரை நடந்து வரும் நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஏலத்திலும் மிகவும் மதிப்புமிக்க வீரர்கள் யார்? யார்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். ஐபிஎல் தொடக்க ஆண்டான 2008ம் ஆண்டு மகேந்திர சிங் தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.6 கோடிக்கு வாங்கியது. அந்த ஐபிஎல்லில் இதுதான் மிகப்பெரிய தொகையாகும்.
கிரன் பொல்லார்ட் ரூ.4.8 கோடிக்கு ஏலம்
2009 ஆம் ஆண்டில் ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து வீரர்கள் அசத்தினர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைந்த கெவின் பீட்டர்சன் மற்றும் சென்னை அணியில் இணைந்த ஆண்ட்ரூ பிளின்டாஃப் இருவரும் தலா ரூ.7.55 கோடிக்கு ஏலம் போயினர். 2010ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் அதிக தொகையாக கிரன் பொல்லார்டை ரூ.4.8 கோடிக்கு தட்டித் தூக்கியது.
ரவீந்திர ஜடேஜா ரூ.12 கோடி
2011ம் ஆண்டு ஐபில் ஏலத்தில் ஒரு வீரரின் மதிப்பு முதன்முறையாக 10 கோடி ரூபாயை தாண்டியது. அந்த வீரர் தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11.04 கோடி ரூபாய்க்கு வாங்கியது. 2012ம் ஆண்டு இதை விட பெரிய ஏலம் அமைந்தது. அதாவது சமீபத்தில் சிஎஸ்கே அணியில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரவீந்திர ஜடேஜாவை 2012ல் சிஎஸ்கே 12.8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
யுவராஜ் சிங் 2 முறை அதிக விலை
2013 ஆம் ஆண்டு ஏலத்தின் உச்ச நட்சத்திரமாக கிளென் மேக்ஸ்வெல் இருந்தார். அவர் மும்பை இந்தியனஸ் அணிக்கு ரூ.6.3 கோடிக்கு சென்றார். 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் மிகவும் அதிக தொகைக்கு ஏலம் போனவர் யுவராஜ் சிங். 2014 ஆம் ஆண்டில் ஆர்சிபி ரூ.14 கோடி யுவராஜ் சிங்கை வாங்கியது. அதற்கு அடுத்த ஆண்டில் 2015ம் ஆண்டு டெல்லி அணி அவரை ரூ.16 கோடிக்கு வாங்கியது.
பென் ஸ்டோக்ஸ், ஷேன் வாட்சன்
2016 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனை ஆர்சிபிக்ககா ரூ.9.5 கோடிக்கு ஏலம் சென்று அதிக மதிப்புமிக்க வீரராக இருந்தார். 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஏலத்தில் மிகவும் மதிப்புமிக்க வீரராக இருந்தார். 2017 ஆம் ஆண்டில், அவர் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்கு ரூ.14.5 கோடிக்கு சென்றார். 2018 ஆம் ஆண்டில், ஸ்டோக்ஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.12.5 கோடிக்கு வாங்கியது.
பேட் கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி
2019 ஆம் ஆண்டில் இந்திய வீரர்களான ஜெய்தேவ் உனத்கட் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் மிகவும் மதிப்புமிக்க வீரர்களாக இருந்தனர். ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா முறையே தங்கள் வீரர்களை ரூ.8.4 கோடிக்கு வாங்கின. 2020 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கொல்கத்தாவுக்கு ரூ.15 கோடிக்கு சென்றார். 2021ம் ஆண்டு தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தானுக்கு சென்றார்.
ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர்
2022 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷானை ரூ.15.25 கோடிக்கு மீண்டும் ஏலத்தில் எடுத்தது. 2023 ஆம் ஆண்டில், சாம் கரன் பஞ்சாப் கிங்ஸுக்கு ரூ.18.5 கோடிக்கு சென்றார். 2024 ஆம் ஆண்டில் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தாவுக்கு சென்றார்.
கடைசியாக 2025ம் ஆண்டு ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்கு ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்டார். இவர் தான் இப்போது அதிக தொகைக்கு ஏலம் போன வீரர். இதேபோல் ஷ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரூ.26.75 கோடிக்கு வாங்கப்பட்டார்.

