பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இருந்து ஐபிஎல் போட்டிகள் மாற்றப்படாது என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் சின்னசாமியில்தான் நடைபெறும் என சிவக்குமார் உறுதியளித்தார்.

ஐபிஎல் 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதன் மூலம் 18 ஆண்டுகால கோப்பை தாகத்தை தணித்தது. ஆனால் பின்னர் ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டம் பெரும் சோகத்தில் முடிந்தது. ஆர்சிபி அணியைக் காண சின்னசாமி ஸ்டேடியம் அருகே ரசிகர்கள் திரண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாயினர்.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகள் நடைபெறவில்லை

இதற்குப் பிறகு பிசிசிஐ பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெரிய தொடர்களை நடத்த அனுமதி மறுத்து வருகின்றன. இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இதேபோல் 2026ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஐபிஎல் 2026 சீசனிலும் சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகள் நடைபெறாது என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதி

இந்த நிலையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இருந்து ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய டி.கே. சிவகுமார், '' இது கர்நாடக மாநிலம் மற்றும் பெங்களூருவின் கௌரவப் பிரச்சினை. அடுத்த ஐபிஎல் போட்டிகள் இங்கேயே நடைபெறுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுப்போம். வரும் நாட்களில் என்ன போட்டிகள் வந்தாலும் அதை நடத்த அனுமதிப்போம்'' என்று தெரிவித்தார்.

பெரிய ஸ்டேடியத்தையும் கட்டுவோம்

"நான் ஒரு கிரிக்கெட் ரசிகன். சமீபத்தில் நடந்த அசம்பாவிதம் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம், ஸ்டேடியத்தின் கண்ணியம் பாதுகாக்கப்படும். சட்ட வரம்புக்குள் கூட்டத்தை நிர்வகித்து ஸ்டேடியம் மேம்படுத்தப்படும். மேலும், மாற்று ஏற்பாடாக ஒரு பெரிய ஸ்டேடியத்தையும் கட்டுவோம்," என்றார்.