Asianet News TamilAsianet News Tamil

2022ல் விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சை சம்பவங்கள்

2022ம் ஆண்டு முடியவுள்ள நிலையில், இந்த ஆண்டில் விளையாட்டு உலகை பரபரப்பாக்கிய சர்ச்சை சம்பவங்களை பார்ப்போம்.
 

major controversies that rocked the world of sports in 2022
Author
First Published Dec 5, 2022, 8:46 PM IST

2022ம் ஆண்டு விளையாட்டிற்கு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்தது. மிகப்பெரிய சர்வதேச விளையாட்டு தொடர்கள்  நடந்தன. கிரிக்கெட்டில் டி20 உலக கோப்பை, காமன்வெல்த் போட்டிகள், செஸ் ஒலிம்பியாட், ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை என பெரிய தொடர்கள் நடந்து விளையாட்டு ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமைந்தன.

2022ம் ஆண்டு முடிந்து 2023ம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், 2022ம் ஆண்டு விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சை சம்பவங்களை பார்ப்போம்.

சௌரவ் கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி நீட்டிப்பு வழங்காதது:

கடந்த 2019ம் ஆண்டிலிருந்து பிசிசிஐ நிர்வாகிகளாக இருந்துவந்தவர்களின் பதவிக்காலம் அக்டோபருடன் முடிவடைந்தது. பிசிசிஐ செயலாளராக இருந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்கு அந்த பதவியில் நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதேவேளையில், பிசிசிஐ தலைவராக இருந்த சௌரவ் கங்குலி பதவிக்காலம் முடிந்தவுடன் நீக்கப்பட்டார். ஜெய் ஷாவுக்கு பதவிக்காலம் முடிந்தும் நீட்டிப்பு வழங்கப்படும்போது, கங்குலிக்கு மட்டும் ஏன் பதவிக்காலம் நீட்டிப்பு வழங்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்து, அது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்..? மைக் ஹசி கருத்து

கங்குலியை வளைத்துப்போட பாஜக முயன்ற பாஜக, அது முடியாமல் போனதால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் கங்குலிக்கு பதவி நீட்டிப்பு வழங்கவில்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் குற்றம்சாட்ட, பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தலில் பாஜக தலையிடவில்லை என்று பாஜக விளக்கமளிக்க, கங்குலி விவகாரம் பாஜக-திரிணாமூல் காங்கிரஸ் இடையேயான அரசியல் மோதலாக வெடித்தது. கடைசியில் புதிய பிசிசிஐ தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டார்.

பாலியல் வழக்கில் இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா கைது:

ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பெற்று ஆஸ்திரேலியாவிற்கு சென்ற தனுஷ்கா குணதிலகா காயத்தால் உலக கோப்பையிலிருந்து விலகினார். ஆனாலும் ஆஸ்திரேலியாவில் தான் இருந்தார். அப்போது 29 வயது இளம்பெண்ணுடன் இண்டர்நெட்டில் பழகிய குணதிலகாவை அந்த பெண் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது தனது அனுமதியின்றி அத்துமீறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில் ஆஸ்திரேலிய போலீஸ் தனுஷ்கா குணதிலகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தனது கழுத்தை நெரித்து மூச்சு முட்ட முட்ட தன்னை அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் அளித்த புகார் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாலியல் வழக்கில் சிக்கிய குணதிலகாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்தது. பாலியல் வழக்கில் சிக்கிய குணதிலகாவிற்கு ஜாமீன் தர ஆரம்பத்தில் மறுத்த ஆஸ்திரேலிய கோர்ட் பின்னர் ஜாமீன் வழங்கியது. 

சானியா மிர்சா - ஷோயப் மாலிக் விவாகரத்து விவகாரம்:

சானியா மிர்சா - ஷோயப் மாலிக் இருவரும் காதலித்து கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், 2018ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்தியா - பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களான இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதே பரபரப்பு எழுந்தது. ஆனால் அண்மையில் அவர்கள் இருவரும் பிரியப்போவதாக எழுந்த தகவல் அதைவிட பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்தியாவுக்கு வரமாட்டோம்னு அடம்பிடித்த பாக்.,கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா! வெளுத்துவாங்கிய முன்னாள்வீரர்

இந்நிலையில், அண்மையில் சானியா மிர்சாவின் இன்ஸ்டாகிராம் பதிவு, சானியா - ஷோயப் மாலிக் ஜோடியின் பிரிவை உணர்த்தும் சமிக்ஞையாக இருந்தது. “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன? அல்லாவைக் காண” என்று பதிவிட்டிருந்தார். ஷோயப் மாலிக்கை பிரிந்திருக்கும் சானியா மிர்சாவின் இந்த பதிவு விவாகரத்து சர்ச்சையை எழுப்பியது. பாகிஸ்தான் நடிகை ஆயிஷா ஓமருடன் நெருக்கமான ஃபோட்டோஷூட்டில் நடித்த ஷோயப் மாலிக், அப்போது ஏற்பட்ட நெருக்கத்தின் காரணமாக அவருடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பதாகவும், அதை அறிந்ததால் சானியா மிர்சா ஷோயப் மாலிக்கை பிரிந்து வாழ்வதாகவும், இருவரும் விவாகரத்து பெறப்போவதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சானியா - ஷோயப் மாலிக் இணைந்து பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளனர். 

பிசிசிஐ - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மோதல்:

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ராஜாங்க ரீதியிலான பிரச்னை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுவதில்லை. பாகிஸ்தான் அணியும் இந்தியாவிற்கு வருவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதுகின்றன. அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானிலும், ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவிலும் நடப்பதாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி ஆசிய கோப்பையில் ஆட பாகிஸ்தானுக்கு செல்லாது; பொதுவான இடத்தில் தான் ஆசிய கோப்பை நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றிருக்கிறது. இந்திய அணி வருவதும் வராததும் அவர்களது விருப்பம். ஆனால் அதற்காக ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தானிடமிருந்து பறிக்கக்கூடாது. இந்திய அணி ஆசிய கோப்பையில் ஆட பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், ஒருநாள் உலக கோப்பையில் ஆடுவதற்கு பாகிஸ்தானும் இந்தியாவிற்கு வராது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவிக்க, இந்த விவகாரம் கடும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

கத்தார் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை 6000 தொழிலாளர்கள் உயிரிழந்த சர்ச்சை: 

கத்தாரில் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை நடத்துவதே பெரிய சர்ச்சையாகத்தான் இருந்தது. ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையை நடத்த 2010ம் ஆண்டு உரிமையை பெற்ற கத்தார், அப்போதிலிருந்தே 12 ஆண்டுகளாக அதற்கான தயாரிப்புகளை செய்தது. கால்பந்து உலக கோப்பைக்காக 2 ஸ்டேடியங்களை புதுப்பித்த கத்தார், 4 ஸ்டேடியங்களை புதிதாக கட்டியது. இந்த கட்டுமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் 6000 பேர் உயிரிழந்த தகவல் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. 

FIFA World Cup 2022: ஃபிரான்ஸ் - போலந்து நாக் அவுட் போட்டி முடிவு..! மிக துல்லியமாக கணித்த ஃபிரான்ஸ் அதிபர்

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை கத்தார் விதித்த கட்டுப்பாடுகள் மற்றும் போலி ரசிகர்களை திரட்டிய சர்ச்சை::

 ஃபிஃபா உலக கோப்பை போட்டிகளை காண ஸ்டேடியங்களுக்கு வரும் ரசிகர்களுக்கு கத்தார் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஸ்டேடியங்களில் மது அருந்த தடை, ஸ்டேடியங்களின் சுற்று வட்டாரப்பகுதிகளில் மது விற்பனைக்கு தடை, மது அருந்திவிட்டும் வரக்கூடாது, கொண்டாட்டத்திற்கான இசை கருவிகளுக்கும் அனுமதி இல்லை என்று கட்டுப்பாடுகளை விதித்தது கத்தார்.

பெண்கள் கண்ணியமான உடைகளை அணிந்துவரவேண்டும், உடல் அங்கம் தெரியும் வகையில் உடை அணியக்கூடாது, டாட்டூ தெரியுமாறு உடை அணியக்கூடாது என்று பெண்களுக்கு உடையில் கட்டுப்பாடுகளை விதித்தது. சூடான வானிலையை கொண்ட கத்தாரில் இப்படியான கட்டுப்பாடுகளை விதித்தால் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் ரசிகர், ரசிகைகள் எப்படி உலக கோப்பையை காண கத்தாருக்கு வருவார்கள்..? கத்தாரின் கடும் கட்டுப்பாடுகளால் வெளிநாட்டு ரசிகர்கள் போட்டிகளை நேரில் காண கத்தாருக்கு வருவதில் ஆர்வம் காட்டவில்லை.

ஆனாலும் அல் பைட் ஸ்டேடியத்தில் நடந்த ஃபிஃபா உலக கோப்பை தொடக்க விழாவில் பல நாட்டு அணிகளின் ஜெர்சிகளை அணிந்துகொண்டு ரசிகர்கள் கூடியிருந்தனர். அவர்கள் எல்லாம் உண்மையாகவே அந்தந்த நாடுகளின் ரசிகர்கள் இல்லை. வெளிநாட்டு ரசிகர், ரசிகைகளின் வருகை குறைவாக இருந்ததால், இந்தியா, வங்கதேசம், நேபாளம், ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வேலைக்காக கத்தார் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காசு கொடுத்து பல நாட்டு ஜெர்சிகளை அணியவைத்து, கால்பந்து ரசிகர்கள் போல கூட்டம் சேர்த்ததாக சர்ச்சை எழுந்தது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios