கொல்கத்தா அணியின் கேப்டனாக, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி  போலவே செயல்பட விரும்புகிறேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கேப்டனாக தினேஷ் கார்த்திக்கும், துணைக் கேப்டனாக ராபின் உத்தப்பாவும் நேற்று நியமிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக், "விராட் கோலி, தனது செயலால் அனைத்தையும் நிரூபிக்கும் கேப்டன். கொல்கத்தா அணியின் கேப்டனாக, அவரைப் போலவே செயல்பட விரும்புகிறேன்.

கோலியைப் போன்று எனது ஆக்ரோஷம் வெளித்தெரியாமல் இருக்கலாம். ஆனால், எனக்குள்ளும் ஆக்ரோஷம் உள்ளது. அது அணியை வழிநடத்தும்போது வெளிப்படும்.

அனுபவமிக்க மற்றும் இளம் வீரர்கள் கலந்துள்ள அணியை வழிநடத்த ஆவலுடன் இருக்கிறேன். அணியில் புதிதாக இணைந்துள்ள கமலேஷ் நாகர்கோடி, ஷிவம் மாவி ஆகியோருக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளேன். வேகப்பந்துவீச்சின் பல்வேறு பரிமாணங்களையும் ஐபிஎல் போட்டியில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், சுனில் நரைன் என எங்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசை பலமான ஒன்றாக உள்ளது. பந்துவீச்சு பயிற்சியாளர் ஹீத் ஸ்ட்ரீக்கும், ஆல் ரவுண்டர் ஜாக் காலிசும் இளம் வீரர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்குகின்றனர்.

தற்போதைய அணியானது, மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும். எனவே, அணியில் இருக்கும் அனைத்து வீரர்களின் முழு திறனையும் வெளிக் கொண்டுவந்து முன்னேறிச் செல்வதே முக்கியமாகும்" என்று அவர் கூறினார்.