டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தும் தொடர்ந்து வெளிநாடுகளில் தோற்றுவரும் இந்திய அணிக்கு நடப்பு ஆஸ்திரேலிய தொடர் மிகவும் முக்கியமானது. இதுவரை ஆஸ்திரேலியாவில் ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றிராத இந்திய அணி, கண்டிப்பாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைப்பதோடு, தொடர்ச்சியாக வெளிநாடுகளில் அடைந்து வந்த தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் உள்ளது. 

அதற்கேற்றவாறு, இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சிறப்பாகவே ஆடிவருகிறது. அடிலெய்டு டெஸ்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, பெர்த் டெஸ்டில் 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்டில் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

மெல்போர்னில் 1981ம் ஆண்டுக்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து இந்திய அணி டெஸ்ட் போட்டியை வென்றுள்ளது. இதையடுத்து இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மைதானத்திலிருந்து வீரர்கள் ஹோட்டலுக்கு திரும்பும்போது ஏராளமான இந்திய ரசிகர்கள் ஹோட்டல் வாசலில் குழுமி, வீரர்களை வரவேற்றனர். 

மெல்போர்ன் டெஸ்டில் வென்ற இந்திய வெற்றி வீரர்களுக்கு ரசிகர்கள் ஹோட்டலில் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது, ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக கோலி சிறிய டான்ஸ் ஒன்றை ஆடிவிட்டு சென்றார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.