ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலத்தில் பஞ்சாப் அணி பல இளம் திறமைசாலிகளை வாரி குவித்துள்ளது. 

ஐபிஎல் 12வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. அதற்கான வீரர்கள் ஏலம் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ரூ.36.2 கோடி கையிருப்புடன் ஏலத்திற்கு சென்ற பஞ்சாப் அணி, சில வீரர்களை எவ்வளவு தொகை கொடுத்தாலும் எடுத்தே தீரவேண்டும் என்ற உறுதியுடன் ஏலத்திற்கு சென்றது. 

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத பஞ்சாப் அணி வர இருக்கும் 12வது சீசனை வெல்வதில் தீவிரமாக உள்ளது. ஏற்கனவே ராகுல், கெய்ல், அஷ்வின், மயன்க் அகர்வால், கருண் நாயர், ஆண்ட்ரூ டை, முஜீபுர் ரஹ்மான், டேவிட் மில்லர் ஆகிய வீரர்களை தக்கவைத்துள்ள நிலையில், நேற்றைய ஏலத்தில் சில சிறந்த வீரர்களை எடுத்தது. 

ஏலத்தின் தொடக்கத்தில் ஹெட்மயர் மீது ஆர்வம் காட்டிய பஞ்சாப் அணி, தொகை சற்று அதிகமானதால் ஆர்சிபி அணிக்கு விட்டுவிட்டது. அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன், நிகோலஸ் பூரானை ரூ.4.2 கோடிக்கும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை ரூ.4.8 கோடிக்கும் எடுத்தது. 

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியை பாடாய் படுத்தி டெஸ்ட் தொடரை அந்த அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ஆல்ரவுண்டர் சாம் கரனை ரூ.7.2 கோடிக்கு எடுத்தது பஞ்சாப் அணி.

இந்த சீசனில் அதிக தொகை கொடுத்து எடுக்கப்பட்ட வீரர்கள் உனாத்கத் மற்றும் தமிழ்நாட்டு மாயாஜால ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. உனாத்கத்தை ரூ.8.4 கோடிக்கு ராஜஸ்தான் அணி எடுத்தது. அதே ரூ.8.4 கோடிக்கு வருண் சக்கரவர்த்தியை மற்ற அணிகளுடன் கடும் போட்டியிட்டு எடுத்தது பஞ்சாப் அணி. தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ஸ்பின்னில் மிரட்டிய வருணை எடுப்பதில் உறுதியாக இருந்த பஞ்சாப் அணி, அவருக்கு எவ்வளவு தொகை தயாராக இருந்தது. இறுதியில் ரூ.8.4 கோடிக்கு வருணை எடுத்தது. 

ஏற்கனவே அஷ்வின், முஜீபுர் ரஹ்மான் ஆகிய வீரர்கள் அந்த அணியில் இருக்கும் நிலையில் வருணையும் எடுத்துள்ளது பஞ்சாப். இவர்களை தவிர பிரப்சிம்ரன் சிங் என்ற இளம் வீரரை ரூ.6.4 கோடிக்கு எடுத்தது. முருகன் அஷ்வின், ஹர்பிரீத் பிரார், அக்னிவேஷ், அர்ஷ்தீப் என சில இளம் வீரர்களையும் அவர்களுக்கான அடிப்படை விலை கொடுத்து எடுத்தது பஞ்சாப் அணி. 

எனவே அடுத்த சீசனில் வலுவான ஒரு அணியுடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.