ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த ஏலத்தில் 351 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். சுமரர் ரூ.150 கோடிக்கு அனைத்து அணிகளும் சேர்ந்து ஏலம் எடுக்க உள்ளன. 

இந்த ஏலத்தில் பஞ்சாப் அணி ஆதிக்கம் செலுத்த உள்ளது. அந்த அணியின் கையிருப்பில் அதிகபட்சமாக ரூ.36.2 கோடி உள்ளது. அந்த அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர் ஹெட்மயர், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மெக்கல்லம் ஆகியோரை ஏலத்தில் எடுக்கும் முனைப்பில் உள்ளது. 

அந்த அணி நினைத்த வீரர்களை எடுக்கும் அளவிற்கான தொகை கையிருப்பில் உள்ளதோடு, அந்த அணியால் 11 இந்திய வீரர்கள் மற்றும் 4 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 15 வீரர்களை எடுக்க முடியும். எனவே ஹெட்மயர், மெக்கல்லம் என அந்த அணி டார்கெட் செய்துள்ள வீரர்களை எடுப்பதில் அந்த அணிக்கு சிக்கல் இருக்காது. 

அதேநேரத்தில் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே செட்டாகி விட்டதால் அந்த அணி பெரிதாக எந்த வீரரையும் ஏலத்தில் எடுக்கப்போவதில்லை, எடுக்கவும் முடியாது. அந்த அணி இந்த ஏலத்தில் பெரிதாக கவனம் செலுத்தாது. சென்னை அணியிடம் ரூ.8.4 கோடி மட்டுமே இருப்பு உள்ளது. மேலும் சிஎஸ்கே-வால் இரண்டே இரண்டு இந்திய வீரர்களை மட்டுமே எடுக்க முடியும். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 5 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 7 இந்திய வீரர்களுடன் பஞ்சாப் அணிக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக 12 வீரர்களை எடுக்க முடியும். 

கடந்த சீசனுக்கான ஏலத்திலேயே ராகுல் மற்றும் மனீஷ் பாண்டேவிற்கான போட்டியில் கடுமையாக ஈடுபட்ட பஞ்சாப் அணி, ராகுலை ரூ.11 கோடிக்கு எடுத்தது. அதேபோலவே மற்ற அணிகளுடன் கடும் போட்டியிட்டு அஷ்வினை ஏலத்தில் எடுத்து கேப்டனாக்கியது. எனவே இந்த முறையும் அதிகமான தொகையை இருப்பு வைத்திருக்கும் பஞ்சாப் அணியும் பிரீத்தி ஜிந்தாவும் ஒரு ஆட்டம் போடாமல் விடமாட்டார்கள்.