கோலியின் பேட்டிங்கைப் பார்த்த பிறகு, சச்சினின் சாதனையை அவர் நெருங்கினால் அது ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்று அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், “பிசிசிஐ-க்கு தற்போது நல்ல வருவாய் கிடைக்கிறது. எனவே, பிசிசிஐ தனக்கென தனி விமானம் ஒன்றை வாங்க முடியும். விமானத்தை பார்க்கிங் செய்வது உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் பிசிசிஐ-யால் செய்ய இயலும்.

இது இந்திய அணியின் பயண நேரத்தில் அதிகளவு சேமிக்க உதவுவதுடன், போட்டிகளுக்கு இடையே அணிக்கு அதிக ஓய்வு நேரம் கிடைக்கும். இதனை பிசிசிஐ ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே செய்திருக்க முடியும்.

அதேபோல், ஐபிஎல் போட்டியில் மட்டுமல்லாமல் உலகில் நடைபெறும் இதர டி20 லீக் போட்டிகளிலும் விளையாட இந்திய வீரர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

சச்சின் டெண்டுல்கர் 100-வது சதம் அடித்த பிறகு, அந்த சாதனையை இனி எவரும் எட்டப்போவதில்லை என்று நினைத்தேன். ஆனால், சமீப காலங்களில் கோலியின் பேட்டிங்கைப் பார்த்த பிறகு, சச்சினின் சாதனையை அவர் நெருங்கினால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்று தோன்றுகிறது” என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.