Isl Chennai - Delhi collapsed at the box level Now it up to Chennai

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டியில் சென்னையின் எஃப்சி - டெல்லி டைனமோஸ் எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டியில் சென்னையின் எஃப்சி - டெல்லி டைனமோஸ் எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்து.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தியது டெல்லி அணி. அதன் பலனாக 24-வது நிமிடத்தில் அந்த அணி முதல் கோல் அடித்தது. சக வீரர் நந்தகுமார் சேகர் பாஸ் செய்த பந்தை, அருமையாகப் பாய்ந்து தலையால் முட்டி கோலடித்தார் டேவிட்.

சென்னை தனது முதல் கோல் வாய்ப்புக்கு போராடி வந்த நிலையில், 42-வது நிமிடத்தில் ரெனெ மிஹெலிக் பாஸ் செய்த பந்தை, ஜிஜி லால்பெக்லுவா தலையால் முட்டி கோலடிக்க, முதல் பாதி முடிவில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது.

பின்னர் தொடங்கிய 2-வது பாதியில் சென்னை ஜிஜி 51-வது நிமிடத்தில், தனக்கும் அணிக்குமான 2-வது கோலை பதிவு செய்தார். இம்முறை ஜெர்மன்பிரீத் பாஸ் செய்த பந்தை, லாவகமாக கடத்திச் சென்று கோல் போஸ்ட் கார்னரில் அவர் கோலடித்தார். இதனால், சென்னை 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆட்டம் முடியும் தருவாயில் டெல்லி வீரர் குயோன் ஃபெர்னான்டஸ் சக வீரர் காளு உச்சே உதவியுடன் கோலடிக்க, ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் நிறைவடைந்தது.

அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னைக்கு இது 2-வது சமன் ஆகும். டெல்லிக்கு இது முதல் சமன்.

இத்துடன் ஒன்பது ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை 5 வெற்றி 2 தோல்விகளுடன் முதலிடத்தில் உள்ளது.

எட்டு ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி ஒரு வெற்றி, 6 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.