indian speed bowlers beating south africa batsmen
முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்க அணி திணறி வருகிறது.
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா அணி 286 ரன்களும் இந்திய அணி 209 ரன்களும் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 65 ரன்களை தென்னாப்பிரிக்க அணி எடுத்திருந்தது.
மூன்றாவது நாளான நேற்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. நேற்று ஒரு பந்து கூட வீசப்படவில்லை. ஒருநாள் வீணான நிலையில், நான்காம் நாளான இன்று, ரபாடாவும் ஆம்லாவும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முகமது சமியின் வேகத்தில் இருவரும் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அவர்களைத் தொடர்ந்து கேப்டன் டுபிளெஸிஸ் ரன் ஏதும் எடுக்காமலும், டி காக் 8 ரன்களிலும் பும்ராவின் வேகத்தில் வீழ்ந்தனர். பிளாண்டர், மஹாராஜ் ஆகியோரும் ஆட்டமிழந்தனர். மோர்கலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடி தனி ஒருவனாக போராடிய டிவில்லியர்ஸ் பும்ராவின் வேகத்தில் வீழ்ந்தார்.
இரண்டாவது இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி, 130 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
208 என்ற எளிய இலக்கை இந்திய அணி விரட்ட உள்ளது.
