ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் வென்ற இந்திய அணியின் வீரர்கள் மற்றும் கேப்டன் கோலி ஆகியோர் பல மைல்கற்களை எட்டி சாதனை படைத்துள்ளனர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 37 ஆண்டுகளுக்கு பிறகு மெல்போர்னில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் இந்திய வீரர்கள் பல மைல்கற்களை எட்டியுள்ளனர். விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டும், பவுலராக பும்ராவும், கேப்டனாக கோலியும் புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.

பும்ராவின் சாதனைகள்:

மெல்போர்ன் டெஸ்டில் பும்ரா 9 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 86 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பும்ரா. இதுதான் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய பவுலரால் வீசப்பட்ட சிறப்பான பந்துவீச்சு. இதற்கு முன்னதாக 1985ம் ஆண்டு அடிலெய்டில் நடந்த போட்டியில் 109 ரன்களை கொடுத்து கபில் தேவ் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய பவுலரின் சிறப்பான பந்துவீச்சாக இருந்தது. அதை பும்ரா முறியடித்துள்ளார். 

அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆண்டில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பவுலர் என்ற சாதனையை பும்ரா நிகழ்த்தியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான பும்ரா, இந்த ஆண்டில் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் அறிமுக ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் மூன்றாமிடத்தை பிடித்தார் பும்ரா. 1981ம் ஆண்டு அறிமுகமான ஆஸ்திரேலிய முன்னாள் பவுலர் ஆல்டர்மேன் அந்த ஆண்டில் 54 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸின் ஆம்புரோஸ் 1988ம் ஆண்டு 49 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் பும்ரா உள்ளார்.

ரிஷப் பண்ட்டின் சாதனை:

இங்கிலாந்து டெஸ்டில் அறிமுகமான இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், இந்த ஆண்டில் 42 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்துள்ளார். இதன்மூலம் அறிமுக ஆண்டில் அதிக விக்கெட்டுகளுக்கான பங்களிப்பை அளித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் பிராட் ஹேடினுடன் பகிர்ந்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பிராட் ஹேடின், அந்த ஆண்டில் மட்டும் 42 விக்கெட்டுகளில் பங்களிப்பை அளித்துள்ளார். 

விராட் கோலி சாதனை:

விராட் கோலியின் கேப்டன்சி மீது ஏராளமான விமர்சனங்கள் இருந்தாலும் நம்பரை வைத்து பார்த்தால் கோலி சிறந்த கேப்டன் தான். மெல்போர்ன் டெஸ்ட் வெற்றி, கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி வெளிநாட்டில் பெற்ற 11வது வெற்றி. இதன்மூலம் வெளிநாடுகளில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற சாதனையை கங்குலியுடன் கோலி பகிர்ந்துள்ளார். கங்குலியின் தலைமையிலும் இந்திய அணி வெளிநாடுகளில் 11 டெஸ்ட் வெற்றிகளை பெற்றுள்ளது. 

மேலும் கேப்டன் கோலி இதுவரை டாஸ் வென்ற 21 டெஸ்ட் போட்டிகளில் 18 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. ஆனால் கோலி டாஸ் வென்ற போட்டியில் இந்திய அணி தோற்றதே கிடையாது.