Indian Captain is the Deputy Supervisor of Punjab Police on March 1.

வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் பஞ்சாப் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்கிறார் டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் 

இந்திய இரயில்வேயுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி ஹர்மன்பிரீத் கெளர் 5 ஆண்டுகள் அங்கு பணிபுரிய வேண்டும். இடையில் விலகும் பட்சத்தில் 5 ஆண்டுகள் ஊதியத்தை அவர் செலுத்த வேண்டியிருக்கும்.

இரயில்வே பணியை ஹர்மன்பிரீத் கெளர் கடந்த ஆண்டு ராஜிநாமா செய்த நிலையில், பஞ்சாப் காவல்துறை பணிக்கான அவரது மருத்துவப் பரிசோதனைகள் ஏற்கெனவே நிறைவடைந்தன. 

தற்போது இரயில்வே பணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப் காவல்துறையில் மார்ச் 1-ஆம் தேதி இணையவுள்ளார்.

மேற்கு இரயில்வேயில் கடந்த மூன்று ஆண்டுகளாக அலுவலக கண்காணிப்பாளராக இருந்த அவர், பஞ்சாப் காவல்துறையில் இணைவதற்கு தன்னை விடுவிக்குமாறு இந்திய இரயில்வேயிடம் கோரியிருந்தார். 

இதனிடையே, ஹர்மன்பிரீத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, பஞ்சாப் காவல்துறையில் அவர் இணை வழிவகை செய்யுமாறு மாநில முதல்வர் அமரிந்தர் சிங், இரயில்வே அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், அமரிந்தர் சிங்கின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக இந்திய இரயில்வே ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளதாக முதல்வர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரத்தில் இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதல்வர் அமரிந்தர் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.