இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவரும் காமன்வெல்த் போட்டிகளில் 55 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்தியாவின் சங்கேத் சர்கார் வெள்ளி பதக்கம் வென்று, காமன்வெல்த்தில் இந்தியாவின் பதக்க பட்டியலை தொடங்கிவைத்தார். 

காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நேற்று (ஜூலை 29) தொடங்கி நடந்துவருகிறது. முதல் நாளில் டேபிள் டென்னிஸ், பாக்ஸிங், ஸ்குவாஷ், நீச்சல் ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

2ம் நாளான இன்று, பளுதூக்குதல் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட சங்கேத் சர்கார், ”ஸ்னாட்ச்” சுற்றில் அதிகபட்சமாக 113 கிலோ எடையை தூக்கி அசத்தினார். 

க்ளீன் & ஜெர்க் சுற்றில் 135 கிலோ எடையை வெற்றிகரமாக தூக்கிய சங்கேத் சர்கார் 141 கிலோ எடையை தூக்க முயன்றபோது காயமடைந்தார். எனவே (113 ஸ்னாட்ச் + 135 க்ளீன்&ஜெர்க்) மொத்தமாக 248 கிலோ எடையை தூக்கினார் சங்கேத் சர்கார்.

மலேசியாவின் பிப் அனிக் ஸ்னாட்ச் சுற்றில் 107 கிலோ எடை மற்றும் க்ளீன்&ஜெர்க்கில் 142 கிலோ எடை என மொத்தமாக 249 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார். 248 கிலோ எடையை தூக்கிய இந்தியாவின் சங்கேத் சர்கார் ஒரேயொரு கிலோ எடையில் தங்கத்தை தவறவிட்டு வெள்ளி பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் இந்தியாவின் பதக்க பட்டியலை தொடங்கிவைத்தார் சங்கேத் சர்கார்.