Mirabai Chanu: கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு பளுதூக்குதலில் தங்கம் வென்றார். இதன் மூலம் காமன்வெல்த்தில் ஹாட்ரிக் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு, பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் தங்கம் வென்றுள்ளார். க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 105 கிலோ எடையை தூக்கி, அவர் இந்த சாதனையை படைத்தார். இதன் மூலம், கிளாஸ்கோ 2026 போட்டிகளில் இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தை பதிவு செய்துள்ளது.

2026 காமன்வெல்த் போட்டியில் மீராபாய் சானு சாதனை

மீராபாய் சானு, இதற்கு முன் 2018 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் நடந்த காமன்வெல்த் போட்டிகளிலும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. போட்டியின் தொடக்கத்தில், ஸ்நாட்ச் பிரிவில் 85 கிலோ எடையை தூக்கி காமன்வெல்த் சாதனை படைத்திருந்தார் சானு. ஆனால், க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவின் முதல் முயற்சியில் 82 கிலோவை தூக்க முடியாமல் போனது. ஆனாலும், இரண்டாவது முயற்சியில் 82 கிலோவையும், மூன்றாவது முயற்சியில் 85 கிலோவையும் வெற்றிகரமாக தூக்கி, புதிய போட்டி மற்றும் காமன்வெல்த் சாதனையை அவர் படைத்தார்.

இதையும் படிங்க:15 வயதிலேயே மாஸ் சம்பவம்! சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

ஹாட்ரிக் தங்கம் வென்ற மீராபாய் சானு

இறுதியாக, 105 கிலோ எடையை தலைக்கு மேல் தூக்கி, தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். இதன் மூலம், காமன்வெல்த் போட்டிகளில் ஹாட்ரிக் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம், கிளாஸ்கோ 2026 போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை மீராபாய் சானு பெற்றுத் தந்துள்ளார். முன்னதாக, ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில், இந்திய வீரர் சானம்பம் ரிஷிகாந்தா சிங் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். இதுதான் இந்தியாவுக்கு முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த மீராபாய் சானு?

இந்தியாவின் புகழ்பெற்ற பளுதூக்கும் வீராங்கனையான சைக்ஹோம் மீராபாய் சானு, 1994-ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் பகுதியில் பிறந்தார். சிறுவயதிலேயே விறகு மூட்டைகளை மிக எளிதாகத் தூக்கிச் சுமந்த இவரின் திறமையைக் கண்ட குடும்பத்தினர், இவரை விளையாட்டுத் துறையில் ஊக்குவித்தனர்.

2014 காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சர்வதேச கவனத்தை ஈர்த்த சானு, 2017 உலகப் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தினார். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: வைபவ் சூர்யவன்ஷிக்கு சீனியர் வீரர்கள் வார்னிங்.. இந்திய அணி டிரெஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன?

விருதுகளை அள்ளிக்குவித்தவர்

தொடர்ந்து காமன்வெல்த் போட்டிகளில் 2018, 2022 மற்றும் 2026 என வரிசையாக தங்கப் பதக்கங்களை வென்று ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளார். இவரின் அபார விளையாட்டு சாதனைகளைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. விடாமுயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் சிறந்த உதாரணமாகத் திகழும் மீராபாய் சானு, இந்திய விளையாட்டு உலகின் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.