- Home
- Sports
- Sports Cricket
- 15 வயதிலேயே மாஸ் சம்பவம்! சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
15 வயதிலேயே மாஸ் சம்பவம்! சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
Vaibhav Suryavanshi: ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3வது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. அதிரடி அரைசதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி 15 வயதில் ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது வென்று சாதனை படைத்தார்.

3வது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி
ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் 3 0 என்ற கணக்கில் முழுதாக கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 192/5 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. வெறும் 49 பந்துகளில் 81 ரன்கள் விளாசி, சூர்யவன்ஷி மிரட்டினார். வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தில் எட்டு பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும்.
வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகன்; தொடர் நாயகன்
பின்பு ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் 151 ரன்கள் குவித்த அவர் தொடர் நாயகன் விருதையும் வென்றார். அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடரை இழந்த இந்திய அணி ஜிம்பாப்வே தொடரை வென்று ஆறுதல் அடைந்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சியில் முதல் வெற்றித் தொடர் இதுவாகும்.
வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை
ஏற்கெனவே முதல் டி20 போட்டியில் தனது முதலாவது சர்வதேச டி20 அரைசதத்தை பதிவு செய்த வைபவ் சூர்யவன்ஷி, 15 வயதில் அரைசதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்து இருந்தார். இப்போது தனது இரண்டாவது அரை சதமும் விளாசி 15 வயதில் 2 அரைசதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தியுள்ளார்.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 15 வயதில் ஆட்டநாயகன் விருது வெண்ற வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். மேலும் தொடர் நாயகன் விருதையும் வென்ற அவர் 15 வயதில் தொடர் நாயகன் விருது வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
பெருமையுடன் பேசிய வைபவ் சொன்னது என்ன?
முதல் ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது வென்றது குறித்து பேசிய வைபவ் சூர்யவன்ஷி, ''மிகவும் நன்றாக உணர்கிறேன். இங்குப் பயிற்சிகள் மிகச் சிறப்பாக அமைந்தன. இதற்கு முன்பாக 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) உலகக் கோப்பையிலும் நான் இங்கு விளையாடியுள்ளேன், அதனால் இங்கு விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
பயிற்சியாளர் மற்றும் கேப்டன் உட்பட அணியின் ஒவ்வொருவரும் எனக்கு முழு ஆதரவு அளித்தனர். எனது வழக்கமான T20 ஆட்டத்தை வெளிப்படுத்தவே நான் முயன்றேன். அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்து, நல்ல தொடக்கம் அமைந்துவிட்டால் அதை ஒரு நீண்ட இன்னிங்ஸாக மாற்ற வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது.
பயிற்சிகளின் போது நான் என்ன செய்கிறேனோ, அதையே போட்டிகளிலிலும் அப்படியே வெளிப்படுத்த முயற்சி செய்கிறேன். இது எனக்கு ஒரு கனவு நனவான தருணம். சர்வதேச கிரிக்கெட்டில் எனது முதல் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது இதுவாகும்'' என்று தெரிவித்தார்.
