இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடக்கிறது. இன்று இரவு நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளுமே உள்ளன.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 தொடர் நடந்துவருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

நல்ல ஃபார்மில் உள்ள இங்கிலாந்து அணியை, குல்தீப்பின்  அசத்தலான சுழல் பந்துவீச்சு மற்றும் ராகுலின் அதிரடி சதத்தால் வீழ்த்தி இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

இங்கிலாந்து தொடர் தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்துடன் ஆடுவதால் எங்களுக்கு எந்தவித நெருக்கடியோ பயமோ இல்லை. எங்களுடன் ஆடுவதால் இங்கிலாந்து அணிக்குத்தான் நெருக்கடி. ஆஸ்திரேலியாவை போல அல்லாமல், இங்கிலாந்திற்கு நாங்கள் நெருக்கடி கொடுப்போம். போட்டி முடிவுகளை உறுதியாக கூறமுடியாது. எனினும் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையுடன் ஆடினால் வெற்றி நிச்சயம். அதனால் வெற்றி மனநிலையுடன் தைரியமாக ஆட உள்ளோம் என கோலி நம்பிக்கை தெரிவித்தார்.

அந்த நம்பிக்கை நம்பிக்கையாக மட்டுமே போய்விடாத அளவிற்கு சிறப்பாக ஆடி, முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதே உத்வேகத்துடன் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

அதேநேரத்தில் சொந்த மண்ணில் முதல் போட்டியிலேயே இந்திய அணியிடம் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று பழிதீர்க்கும் முனைப்பில் உள்ளது. எனவே இன்று நடக்கும் இரண்டாவது போட்டி கண்டிப்பாக மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்